நாங்கள் பிழை விட்டோம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம்! பகிரங்கமாக கூறிய மகிந்த ராஜபக்ச
அரசியல் என்ற ரீதியில் பிளவுப்படாமல் அனைவரும் ஒன்றினைந்து செயற்பட்டால் தற்போது நாடு காணப்படும் நிலையிலிருந்து முன்னோக்கி செல்ல முடியும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (16.10.2022) நாவலபிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
மேலும் கூறுகையில், “நாட்டில் உருவாகியுள்ள பிரச்சினைகளை எம்மீது சுமத்திவிட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடாது. வரலாற்றை பார்த்து ஒரு தீர்மானத்தை எடுக்க கூடியதாக இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
நாம் ஒரு நாடாக பல சவால்களை சந்தித்துள்ளோம். கோவிட் பிரச்சினையை எதிர்கொண்டு, மீண்டெழ முயற்சிக்கும்போது பொருளாதார சவால் ஏற்பட்டது. அதனை எதிர்கொள்கையில் மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
மன்னர் காலத்தில் இருந்தே ஆக்கிரமிப்பு போன்ற சவால்களை, ஒன்றாக இருந்து எழுந்து எதிர்கொண்ட வரலாறு எமக்கு உள்ளது. இது தெரிந்தும், தெரியாதவர்கள்போல் சிலர் செயற்படுகின்றனர்.
பிழை விட்ட இடங்கள்
இந்த நாடு முன்னேற்றம் அடைவதை சிலர் விரும்புவதில்லை. இந்த நாடு அமைதியாக இருப்பதை சிலர் விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் முடியாது, இல்லை என்று கூறிக்கொண்டு இருப்பார்கள். நாங்கள் இந்த நாட்டை மாற்ற வேண்டும்.
நாங்கள் பிழை விட்ட இடங்கள் இருக்கின்றன அவற்றை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். வரலாற்றில் பிழை செய்யாதவர்கள் யாரும் இல்லை. பிழை செய்தால் அதனை சரி செய்வதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது. பிழை விட்ட இடத்தில் இருந்து முன்னோக்கி செல்லாமல் இருந்தால் தான் நாங்கள் வெட்கப்பட வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் வேலைத்திட்டம் ஒன்றை அமைத்துக்கொண்டு முன்னோக்கி செல்வது அவசியம்.
சிறந்த எதிர்காலம்
நாங்கள் விழுந்த இடத்தில் இருந்து எழுந்தால் நம்மால் பல வெற்றிகளை அடைய முடியும். பிளவடைந்த நிலையில் இந்த பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.
ஒற்றிணைந்து இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டால் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும்.
தற்போது நாடு இருக்கும் நிலையில் இருந்து ஒரு அடியேனும் முன்னால் எடுத்து வைப்போம். அதற்காக அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம்.
அத்துடன் மக்களின் வாழ்வாதார சுமையை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு நாங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.
அவற்றை கலந்துரையாடலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அதற்காக கட்சி என்ற ரீதியில் நாங்கள் முன் வந்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி:கிரிஷாந்தன்