மகிந்தவின் முகாமுக்குள் இழைக்கப்பட்ட தவறு! காலம் கடந்து பகிரங்கப்படுத்தும் அரசியல்வாதி
மகிந்த ராஜபக்சவின் முகாமுக்குள் மிக நீண்ட காலமாக எனக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எனினும் தான் பொறுமையாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மகிந்த தரப்பில் இருந்து விலகல்
கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
டலஸ் அழகப்பெரும மகிந்த தரப்பிலிருந்து விலகியமை மிக முக்கியமான விடயமாக அப்போது பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மகிந்தவின் பலமான அணியில் இருந்து வெளியில் வருவது தொடர்பான முடிவு உடனடியாக எடுக்கப்பட்ட முடிவல்ல. பல மாதங்களாக நாங்கள் ஆராய்ந்து மதிப்பீடுகள் செய்து எடுக்கப்பட்ட தீர்மானம்.
உலக சாதனையாக இருந்திருக்கும்
உள்ளக ரீதியில் பல நெருக்கடிகளுக்கு நாங்கள் கட்சிக்குள்ளே முகம் கொடுத்தோம். பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இருந்தோம்.
பிரச்சினை பெரிய பூதாகரமாக வெடித்தபோது நாங்கள் வெளியே வந்தோம். காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் மேற்கொள்வதற்கு முன்னதாகவே நான் அமைச்சரவையிலிருந்து வெளியேறிவிட்டேன்.
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை நான் மூன்று அமைச்சுகளுக்கு மாற்றப்பட்டேன்.
இது உலக சாதனையாக இருந்திருக்கும். இதனூடாக உள்ளக ரீதியில் எந்தளவு தூரம் நாங்கள் நெருக்கடியில் இருந்திருக்கின்றோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.