மின்சார சபையை தொடர்ந்தும் ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்
நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
6 மாதங்களுக்கு இந்த கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவும் 9 லட்சம் ரூபா மின்சாரக் கட்டணத்தைச் செலுத்தவில்லை எனவும், கடந்த ஒகஸ்ட் மாதம் முதல் தற்போது வரையில் அவரது மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார கட்டணம்
நாடளாவிய ரீதியில் உள்ள ஏழை மக்களின் வீடுகளில் மிகக் குறைந்த மின்கட்டணத்தை செலுத்தாத குற்றத்திற்காக அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், முடிந்தால் அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் ஷிரந்தி ராஜபக்சவின் வீட்டில் மின்சாரத்தை துண்டித்துமாறு ரஞ்சன் ஜெயலால் சவால் விடுத்துள்ளார்.
மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் மின்சார சட்ட மூலத்திற்கு எதிராக மின்சார சபைக்கு முன்பாக துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ச குடும்பம்
ஏற்கனவே மகிந்தவின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச, தனது திருமணத்தின் போது ஏற்பட்ட மின்சார கட்டணத்தை செலுத்த தவறியிருந்தார்.
அதற்கான முழுத்தொகை பணமான 23 இலட்சத்தை தற்போதைய ராஜாங்க அமைச்சர் ஒருவர் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.