மகாவலி கங்கைப் பெருக்கெடுப்பு! நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்வு
கந்தளாய் மகாவலி கங்கையில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, மூன்று கிராமங்களுக்குள் வெள்ளநீர் புகுந்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
கந்தளாய் சூரியபுரப் பகுதிக்குள் மகாவலி கங்கை பெருக்கெடுத்ததால், அப்பகுதியைச் சார்ந்த கிராமங்கள் தற்போது நீரில் மூழ்கியுள்ளன.
சூரியபுர, சமகிபுர, சமணலப்பாலம் உள்ளிட்ட கிராமங்கள் முழுவதுமாக வெள்ளநீரில் மூழ்கி நிலைமை கடுமையாக உருவாகியுள்ளது.
மீட்பு நடவடிக்கை
வெள்ளநீர் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளன.
மேலும், வெள்ளநீர் அதிகரித்ததால் அப்பகுதிகளுக்கான போக்குவரத்து மார்க்கங்களும் முற்றிலுமாக முடங்கியுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட அவசர மீட்பு நடவடிக்கைகளின் போது 140-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீட்கப்பட்டு, மகாவலி மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், மருத்துவ உதவி உள்ளிட்ட தேவையான நிவாரண சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.