மகாவலி அதிகாரசபை சிங்களவர்களை மட்டும் வாழ வைக்கும், தமிழர்களை அழிக்கும் அமைப்பா? கஜேந்திரன்
உலக வங்கி, மகாவலி அதிகாரசபைக்கு நிதி உதவி வழங்கி மயிலத்தமடு மாதவனை பகுதியில் இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து, தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத குடி பரம்பலை ஏற்படுத்துவதற்கு துணைபோகின்றார்களா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மகாவலி அதிகாரசபை என்பது சிங்களவர்களை மட்டும் வாழ வைக்கின்ற, தமிழர்களை அழிக்கின்ற அமைப்பா என்ற கேள்வியை நான் கேட்ட விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர் நாட்டுப் பற்றாளர் நடேசன் அறக்கட்டளை அமைப்பின் ஊடாக வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட சுங்கான்கேணி, கிண்ணையடி ஆகிய கிராமத்தில் இருந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
மயிலத்தமடு மாதவனை பகுதியில் எட்டாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கள விவசாயிகள் என்று சொல்பவர்களால் பலவந்தமாக காணிகள் பிடிக்கப்படுகின்றன.
திடீரென வந்து ஒரு பகுதியினை பிடித்து தங்களுடைய பகுதி என்று பிரகடனம் செய்கின்றார்கள். பின்னர் பண்ணையார்களிடம் மூன்று நாட்களுக்குள் இந்த பகுதியை விட்டு செல்ல வேண்டும், இல்லையெனில் உங்களை வெட்டுவோம், மாடுகளை கொலை செய்வோம் என்று சொல்கின்றார்கள்.
வெளியேறாதவிடத்து மாடுகளை கொலை செய்கின்றார்கள். மக்களை அடித்து அச்சுறுத்துகின்றனர். அச்சத்தின் காரணமாக பண்ணையாளர்கள் வெளியேறுகின்றார்கள்.
இதன் பிற்பாடு அக்காணியை துப்பரவு செய்கின்றார்கள். இதற்கு மகாவலி அதிகாரசபை முழுமையாக துணை நிற்கின்றது. எட்டாயிரம் ஏக்கர் காணியில் சோளம், நெல் செய்கை செய்யப்படுகின்றது.
மகாவலி அதிகார சபைக்கு உலக வங்கி நிதி உதவி வழங்கி வருகின்றது. உலக வங்கி மகாவலி அதிகாரசபைக்கு நிதி உதவி வழங்கி இங்கு இனவாத அடிப்படையிலே தமிழர்களை அழித்து தமிழர்களுடைய பொருளாதாரத்தினை அழித்து சிங்கள பேரினவாத குடிப்பரம்பலை ஏற்படுத்துவதற்கு தான் துணைபோகின்றார்களா என்ற கேள்வியை கேட்க விரும்புகின்றேன். இதனை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.


