3 மாதங்களாகக் காணாமல்போன மகாசென் தந்தயானை : வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி விளக்கம்
மகாசென் என்ற தந்தயானை கடந்த மூன்று மாதங்களாகக் காணப்படாமல் இருப்பது, அந்த யானைக்கு ஏதேனும் ஆபத்து நடந்துவிட்டது என்பதைக் குறிக்காது என்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காட்டு யானைகள் பரந்த வனப் பகுதிகளில் தினமும் பல கிலோமீட்டர்கள் பயணிப்பதால், பல மாதங்கள் கண்ணில்படாமல் உலா வருவது இயல்பான ஒன்று என விளக்கமளித்துள்ளார்.
நேற்று(22.10.2026) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாட்டின் மிக நீளமான தந்தங்களைக் கொண்டதாகக் கருதப்படும் 'மகாசென்' யானையைக் காணவில்லை எனக் கவலை வெளியிட்டிருந்த நிலையிலேயே, வனஜீவராசிகள் திணைக்களம் இந்த பதிலை வழங்கியுள்ளது.
அசம்பாவிதம் எதுவும் நேர்ந்ததாக
யானைகள் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் இருப்பதில்லை. அவை கூட்டமாகவோ அல்லது தனித்தோ தினமும் நீண்ட தூரம் சஞ்சரிக்கும். எனவே சில மாதங்களுக்கு மனிதர்களின் பார்வையில் படாமல் இருந்துவிட்டு மீண்டும் தென்படுவது வழக்கமானது.

மகாசென் யானை 3 மாதங்களாகத் தென்படவில்லை என்ற போதிலும், அதற்கு அசம்பாவிதம் எதுவும் நேர்ந்ததாக இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என குறித்த அதிகாரி உறுதிப்படுத்தினார்.
முன்னதாக, கவந்திஸ்ஸ' தந்தயானையின் மறைவுக்குப் பிறகு, சமூக வலைத்தளங்களில் பரவிய உணர்ச்சிப்பூர்வமான பதிவுகளால் பொதுமக்கள் யானைகள் குறித்து மிகுந்த உணர்வுபூர்வமாக மாறியுள்ளனர்
இந்தநிலையில், போதிய ஊழியர் பலம் இல்லாததால், ஒவ்வொரு யானையையும் தனித்தனியாகத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது நடைமுறைக்குச் சாத்தியமற்றது என திணைக்களம் தெரிவித்துள்ளது.