மஹரகம புற்றுநோய் மருத்துவமனை தொடர்பில் பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள் அவசர வேண்டுகோள்
மஹரகம புற்றுநோய் மருத்துவமனையில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவும் காரணத்தினால் மருந்துப் பொருட்களை அன்பளிப்புச் செய்யுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகின்றது.
அதன் காரணமாக கோலோஸ்டமி பைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்குவது மிகவும் அவசியம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் டொக்டர் சமல் சஞ்சீவ கூறுகிறார்.
இதற்கிடையில், மருத்துவமனையின் நோயாளிகளுக்கான சிகிச்சை நடவடிக்கைகளைத் தொடரத் தேவையான பல மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை அவசரமாக நன்கொடையாக வழங்குமாறு அபேக்ஷா மருத்துவமனை அதிகாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்தக் கோரிக்கையின்படி, நன்கொடையாக எதிர்பார்க்கப்படும் மருந்துகளின் வகைகள்
- Tigecycline - டைகெசைக்ளின் 50 மிகி ஊசி மருந்து
- Methotrexate - மெத்தோட்ரெக்ஸேட் 500 மிகி ஊசி மருந்து
- Fluorouracil - ஃப்ளூரோயுராசில் 1கி ஊசி மருந்து
- Methotrexate- மெத்தோட்ரெக்ஸேட் 2.5 மிகி மாத்திரைகள்
- Voriconazole - வோரிகோனசோல் 200 மிகி மாத்திரைகள்
- Chlorambucil - குளோராம்புசில் 2 மிகி காப்ஸ்யூல்கள்
மேலும், வயது வந்த நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் கோலோஸ்டமி பைகள் மற்றும் தட்டுகளும் அத்தியாவசிய அறுவை சிகிச்சை உபகரணங்கள் போன்றவற்றை நன்கொடையாக வழங்குமாறு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அன்பளிப்புச் செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகளைச் சுட்டிக்காட்டியுள்ள மருத்துவமனை நிர்வாகம், அன்பளிப்பாக வழங்கப்படும் மருந்துகள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையால் (NMRA) அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அந்த மருந்துகளுக்கான அசல் ரசீதுகளும் அதனுடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான உபயோகப் பொருட்களின் நன்கொடைகள், வார நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.