மஹர சிறைச்சாலை கலவரத்திற்கான காரணம்..! கைதிகளால் ஏற்பட்ட சேதவிபரம் வெளியானது
மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஏ.சீ. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹர சிறைச்சாலையினுள் ஏற்பட்ட பதற்றநிலை தொடர்பில் இன்று (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்துக்கான காரணம்
இதேவேளை, சம்பவத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், காரணத்தை கண்டறிந்து பொறுப்புக்கூற வேண்டியவர்கள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கைதிகளால் சிறைச்சாலைக்குள் பல்வேறு கட்டடங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, சிறைச்சாலையின் சமையலறை, புனர்வாழ்வுக் கட்டடம், அலுவலகம், தலைமை சிறைக்கட்டுப்பாட்டாளர் அலுவலகம் மற்றும் சிறைச்சாலை வைத்தியசாலை ஆகியன சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நிலைமை தற்போது அமைதியாக இருப்பதாகவும், கைதிகளின் உறவினர்கள் அமைதியாக குறித்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.