மல்வத்து அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்துள்ள அறிவுறுத்தல்
சமூக ஊடகங்கள் மூலம் சில தரப்பினர் மேற்கொள்ளும் ஆதாரமற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளைக் கருத்தில் கொண்டு, சமூக ஊடகங்களை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறைக்கு உட்படுத்துவது காலத்தின் தேவையாகும் என்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய உபா மகா விகாரையின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சமூக ஊடகங்களால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் தாக்கங்களிலிருந்து நாட்டின் சிறுவர் பரம்பரையைப் பாதுகாப்பதற்காக மதத் தலைவர்களின் தலையீட்டை எதிர்பார்த்து, தேசிய ஊடக அறக்கட்டளை 10 அம்ச முன்மொழிவை தயாரித்துள்ளது.
16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான பாதுகாப்பான ஊடகத் தரநிலைகள் மற்றும் நெறிமுறை வழிகாட்டுதல்களை உருவாக்குவதன் அவசியத்தை சுட்டிக்காட்டும் இந்த முன்மொழிவு இரு மகாநாயக்க தேரர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
குழந்தைகளின் பாதுகாப்பு
அதன்போதே மகாநாயக்க தேரர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர். அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய மல்வத்து பீடத்தின் மகாநாயக்கர் அதிசங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர், கொரோனா காலத்தில் கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் நடைபெற்றதால் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கைகளில் கையடக்க தொலைபேசிகள் பரவலாகச் சென்றடைந்துள்ளன.

இணையம் மூலம் நல்லதை விட தீய விஷயங்களை அதிகம் கற்றுக்கொள்ளும் குழந்தைகள் சமூக ஊடகங்கள் வழியாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும் சூழ்நிலைகள் கூட ஏற்பட்டுள்ளன.
சமூக ஊடக ஒழுங்குமுறை பற்றி பேசக்கூட பலர் அஞ்சும் பின்னணியில், தேசிய ஊடக அறக்கட்டளை இது குறித்து ஒரு உரையாடலை உருவாக்கியது பாராட்டிற்குரிய விடயமாகும் என்றும் குறிப்பிட்டார். அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் அதி சங்கைக்குரிய வரக்காகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர், சில பாடசாலை மாணவர்களின் வாழ்க்கையே கையடக்க தொலைபேசியாக மாறிவிட்டதாக சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட தாக்கம்
இளைஞர்கள் போதைப்பொருள் மற்றும் மதுபானங்களுக்கு அடிமையாவதற்கும் சமூக ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

மேலும், அஸ்கிரிய பீடத்தின் பிரதி மகாநாயக்கரும், களனி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான சங்கைக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரர், சமூக ஊடக அடிமைத்தனம் பொது சமூகத்தையும், பிரிவேனா கல்வி கற்கும் சாமணேர தேரர்கள் உட்பட துறவற சமூகத்தையும் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஒருவரின் நற்பெயரை ஒரு நொடியில் அழிக்க சமூக ஊடகங்கள் வல்லமை பெற்றுள்ளதால், இந்த அழிவிலிருந்து குழந்தைப் பரம்பரையை விடுவிக்க ஒரு முறையான திட்டம் தேவை என்று அவர் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய ஊடக அறக்கட்டளையின் சிரேஷ்ட ஆலோசகரும், ஸ்ரீ பாலி வளாகத்தின் சிரேஷ்ட பேராசிரியருமான டியூடர் வீரசிங்க, மனிதநேயத்தை மேம்படுத்த சமூக ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட உலகின் பல நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகங்களை தடை செய்வது உள்ளிட்ட ஒழுங்குமுறை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், இலங்கையில் சமூக ஊடகங்களை ஒழுங்குபடுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒன்லைன் (நிகழ்நிலைப் பாதுகாப்பு) சட்டம் தற்போது நடைமுறையில் இல்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.