சிறையில் வாடும் ஞானசார தேரர்.. உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள அவசர கடிதம்
சிறைதண்டனை விதிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தும் போது சாதாரண உடையில் அழைத்துச் சென்ற சிறைச்சாலைத் திணைக்களத்தின் நடவடிக்கை தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் தங்களது ஆழ்ந்த கவலையை தெரிவித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
மல்வத்து, அஸ்கிரி, அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய பிரிவுகளின் மகாநாயக்க தேரர்களின் கையொப்பத்துடன் அக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டை தாம் ஏற்பதாகவும், அதேவேளை ஒரு பிக்குவின் காவி ஆடையைக் களைவதோ அல்லது அவரது பிக்கு அந்தஸ்தை இரத்து செய்வதோ அரசின் நிர்வாக நடைமுறைகளினாலோ அல்லது சிறைச்சாலை விதிகளினாலோ தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் அல்ல என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இது மகா சங்கத்தினரின் மத அதிகார வரம்பிற்குட்பட்ட விடயம் எனவும், ஞானசார தேரர் பாராஜிக குற்றத்தைப் புரிந்துவிட்டதாகவோ அல்லது அவரது காவி ஆடையைக் களைய வேண்டும் என்றோ சம்பந்தப்பட்ட சங்க சபை எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை நிலையியல் கட்டளைச்சட்டத்தின் 550வது விதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கைதிகளுக்கான குறைந்தபட்ச தரநிலை விதிகளின் 17(3) பிரிவு ஆகியவற்றின் படி, தண்டனை பெற்ற கைதிகளை நீதிமன்றத்திற்கோ அல்லது சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லும்போது சிறை சீருடைக்கு பதிலாக அவர்கள் வழக்கமாக அணியும் சாதாரண ஆடைகளை அணிய அனுமதிக்கப்பட வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
துறவிகள் தண்டனைக்கு முன்னர் அணிந்திருந்த ஆடை காவி ஆடையே தவிர சாதாரண மனிதர்களின் ஆடை அல்ல எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே, எதிர்வரும் நீதிமன்ற விசாரணைகளின் போது ஞானசார தேரர் தனது பிக்கு அந்தஸ்தைப் பேணி காவி ஆடையுடன் முன்னிலையாவதற்கும், சிறைக் காவலில் இருக்கும் போது அவரது துறவற நிலைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் நடந்துகொள்வதற்கும் தேவையான நிர்வாக வசதிகளைச் செய்து தருமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.