மருதமடு மாதாவுக்கு செங்கம்பள வரவேற்பளித்த முள்ளியவளை அந்தோனியார் தேவாலய பங்கு மக்கள்
முள்ளியவளையில் உள்ள அந்தோனியார் ஆலய பங்கு மக்கள் மருதமடு மாதாவை இன்று (29.04.2024) காலை வரவேற்றனர்.
மூன்றாம் கட்டைச் சந்தியில் இருந்து வரவேற்கப்பட்ட மருதமடு மாதா மாங்குளம் முல்லைத்தீவு வீதியின் வழியாக பயணித்து முள்ளியவளை அந்தோனியார் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பெருந்திரளான மக்கள் கூடி மாதாவை வரவேற்றதோடு ஆலயத்தில் நடைபெறும் திருப்பலிகளிலும் கலந்து கொண்டனர்.
பூரண கும்பம், மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு, செங்கம்பள வரவேற்பு, மலர் தூவல், வரவேற்பு நடனம் என வரவேற்பு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
கும்பம் வைத்து வரவேற்ற மக்கள்
தமிழர் பண்பாடாகிய கும்பம் வைத்து வரவேற்கும் உயரிய வரவேற்பினை மருதமடு மாதாவிற்கு மக்கள் வழங்கியிருந்தனர்.
சிலாவத்தை, தண்ணீரூற்று, முள்ளியவளை மக்கள் வீதிகளில் கும்பங்களை வைத்து மருதமடு மாதாவை வரவேற்று ஆசி பெற்றிருந்தனர்.
சிலாவத்தை சந்தியில் இருந்து சிலாவத்தை மாதிரி கிராமம் ஊடாக பவனி சென்ற மடு மாதாவினை வரவேற்கும் பொருட்டு வீதிகளில் மக்கள் கும்பங்களை வைத்திருந்தனர்.
தண்ணீரூற்றிலும் இது போலவே கும்பம் வைத்து வரவேற்கப்பட்டிருந்தார். குறிப்பாக இலங்கை வங்கியின் முள்ளியவளைக் கிளையினர் வங்கியின் முன்பாக பூரண கும்பம் வைத்து மாதாவை வரவேற்றிருந்தனர்.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வைகாசி விசாக பொங்கலுக்காக தீர்த்தம் எடுத்து வரும் போது மக்கள் நடந்து கொண்டது போல மருதமடு மாதாவினை வரவேற்பதற்கும் நடந்து கொண்டதாக கவிஞர் நதுநசி மற்றும் கவிஞர் அபியது ஆகியோர் தங்கள் உணர்வுகளை குறிப்பிட்டிருந்தனர். தேங்காய் உடைத்தலை விடுத்தது மட்டுமே இருந்த வேறுபாடு என அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு
மூன்றாம் கட்டைச் சந்தியில் இருந்து முள்ளியவளை அந்தோனியார் ஆலயம் வரையில் மருதமடு மாதா பவனி வந்த வாகனம் முள்ளியவளை பங்கு இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு மூலம் வரவேற்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது என மாஞ்சோலை வைத்தியசாலை தாதியொருவர் குறிப்பிட்டார்.
மாஞ்சோலை வைத்தியசாலை தாதியரும் பணியாளர்களும் கூடி மருதமடு மாதாவை வரவேற்று ஆசி பெற்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் அணி வகுப்பினர் நீல ரீசேட்டில் வரவேற்பு குறிப்புக்கள் பொறிக்கப்பட்டு விசேடமாக தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்ததோடு கைகளில் மருதமடு மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடிகளையும் ஏந்தியிருந்தமையினையும் அவதானிக்க முடிந்தது.
இவையெல்லாம் மருதமடு மாதாவின் முள்ளியவளைக்கான வருகையை இட்டு அவர்கள் அடைந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடு என முள்ளியவளையில் பங்கின் ஈடுபாட்டாளராக இருக்கும் முதியவர் ஒருவர் இளைஞர்களின் செயற்பாடு தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
செங்கம்பள வரவேற்பு
முள்ளியவளை அந்தோனியார் ஆலயத்தில் மருதமடு மாதாவுக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாண்ட் வாத்திய இசையுடன் முள்ளியவளை உப பிரதேச சபை அலுவலகச் சந்தியில் இருந்து (மாலதி கட்டவுட் சந்தி)முள்ளியவளை அந்தோனியார் ஆலய முன் வாசல் வரை வரவேற்கப்பட்டார்.
ஆலய பிரதான வாயிலில் இருந்து வரவேற்பு நடனத்துடனும் சிறார்களின் மலர் தூவலுடனும் செங்கம்பளம் மீது வரவேற்கப்பட்டு அந்தோனியார் ஆலயத்தினுள் அமர்ந்தப்பட்டு ஆராதிக்கப்பட்டார்.
கூடியிருந்த மக்களில் ஏகோபித்த வேண்டுதலோடு திருப்பலிகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |