கோவிட் சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பிரதமர் தெளிவாக கூறினார் – எஸ்.எம். மரிக்கார்
கோவிட்-19 சடலங்களை அடக்கம் செய்ய முடியும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெளிவாகக் கூறினார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றின் ஹன்சார்டிலும் இந்த விடயம் தொடர்பில் ஏதேனும் திருத்தங்கள் செய்யக் கூடாது என ஹன்சார்ட் திணைக்களத்திடம் தாம் இன்று காலை கோரியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக மரணிப்போரை அடக்கம் செய்வதற்கு தற்பொழுது நாட்டில் இடமுண்டு எனவும் கோவிட்-19 தொற்றாளிகள் மரணிக்கும் தறுவாயில் அவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என்றே தாம் நாடாளுமன்றில் வினவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் மத்திய கிழக்கு நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் தந்திரமாக இந்த கோவிட்-19 மரணங்களை அடக்கம் செய்யும் வாக்குறுதி அமைந்து விடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சர்வதேசத்திற்குச் சென்றுவிட்டதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.




