தேர்தலுக்குப் பின்னான மாவீரர் நாள் அரசியல்
“எதிரி எதை விரும்புகிறானோ அதனை நீ எதிர், எதிரி எதனை எதிர்க்கிறானோ அதனை நீ ஆதரி“ என்று அரசியல் ராஜதந்திரத்தில் ஒரு கூற்றுண்டு. இப்போது இலங்கை அரசியலில் தேர்தலில் அமோக வெற்றியை அநுர பெற்றுவிட்டார். அந்த வெற்றியில் தமிழ் மக்களையும் வென்றிருக்கிறார் என்று சொன்னால் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதில் உண்மையும் உண்டு.
அந்த வெற்றிக்காக தமிழர்களுக்கு ஒரு சலுகையை இந்த வருடத்தில் கொடுத்திருக்கிறார். அதுதான் மாவீரர் நாள் நிகழ்வில் தலையிடாமை. இதன் மூலம் அரசுத் தலைவர் தமிழ் மக்களை மீளமுடியாத அரசியல் தோல்விக்கு விட்டுச் சென்றிருக்கிறார் என்பதுதான் உண்மையாகும்.
அதை பற்றிய சற்று பார்ப்போம்.
இலங்கை அரசியலில் எப்போதுமே இனவாதிகளுக்கு சிங்கள மக்கள் முன்னுரிமை கொடுத்திருக்கிறார்கள்.அது டி.எஸ்.சேனநாயக்க முதல் அநுர குமார திசாநாயக்க வரை அதுவே நிகழ்ந்துள்ளது.
மேலெழுந்த வாரியாக பார்க்கின்ற போது அநுர குமார திசாநாயக்க சமத்துவம் பேசினார், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் அரசியல்வாதிகளினால் நிகழ்ந்தது என்றார், ஊழலுக்கு எதிராக புதிய புரட்சி என்றார், System change(முறைமை மாற்றம்) என்றார், இதனால் ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்கள் அநுரவுக்கு வாக்களித்தார்கள்.
அநுர அலை
அந்தக் கையோடு அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை பறித்தெடுத்து ஊழலுக்கு எதிரானதும், அரசு செலவினங்களை குறைப்பதாகவும் கூறி புதிய அலை ஒன்றை தோற்றுவித்தார்.
அதன் மூலம் பொது தேர்தலில் சிங்கள மக்கள் மாத்திரமல்ல தமிழ் மக்களும் அவருடைய கட்சிக்கு வாக்களித்தார்கள். சிங்கள மக்களை பொறுத்த அளவில் சடுதியாக சில மாதங்களுக்குள் அநுர மீதான அநுர அலை தோன்றியதல்ல. அது கடந்த 20 ஆண்டுகளாக அநுர குமார திசநாயக்கா பேசிய இனவாதத்தின் அறுவடைதான் இது என்பதை அனைவரும் மறந்து போய்விட்டனர். உண்மையில் சிங்கள மக்கள் தாம் கண்கண்ட ஒரு இனவாதிக்கே வாக்களித்துள்ளனர்.
அத்தகைய இனவாதி சிங்கள மக்கள் தரப்பில் இருக்கின்ற ஊழல்வாதிகளையும் எதிர்த்தார் என்பதனால் அவருக்கு மேலும் அதிக ஆதரவும் கிட்டியது என்பதே உண்மையாகும். இது இவ்வாறு இருக்கையில் இலங்கையின் எழுதப்படாத சட்டமாக வெளித் தெரியாத ஆனால் இலங்கை அரசின் இறைமையை பிரயோகிக்கின்ற சக்தியாக விளங்கும் பௌத்த மகா சங்கம் அநுரவுக்கு ஆதரவளித்தமை என்பது ஜேவிபிக்கு அளித்த ஆதரவாக மட்டும் கருதி விடக்கூடாது.
இவ்வளவு காலமும் ஜேவிபி யினுடைய தலைவர்கள் சிங்கள சாதிய கட்டமைப்பில் கீழ் மட்டத்தைச் சார்ந்தவர்களாக இருந்தனர். முதன்முறையாக ஜேவிபி தலைவராக ஒரு கொய்கம உயர் சார் சாதியைச் சார்ந்த அநுர குமார தலைவராக்கப்பட்டமையே ஜேவிபி அரசியல் தலைமைத்துவத்திற்கு அவர்கள் அனுமதிக்க காரணமாய் இருந்தது.
இரண்டாவது காரணம் தமிழிழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு அநுர குமாரா திசாநாயக்க தலைமையில் 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட படையை இலங்கை அரசுக்கு திரட்டி கொடுத்தனர் என்பதனாலும், சுனாமிக் கட்டமைப்பின் போது விடுதலைப் புலிகளுக்கு இலங்கை இறைமையில் பங்கு கொடுக்க முடியாது என எதிர்த்து நின்றமையும், அவ்வாறே வட-கிழக்கை பிரிப்பதற்கு போராடி வட-கிழக்கு இணைப்பை பிரித்தமையும் ஜேவிபினர் கண்கண்ட இனவாதிகளாக பௌத்த மா சங்கத்துக்கும், சிங்கள மக்களுக்கும் தோற்றமளித்தனர்.
அரகலயப் போராட்டம்
இந்தப் பின்னணியில் தான் அரகலயப் போராட்டமும் அதற்குப் பின்னான அரசியல் நிகழ்வும் அநுர குமாரவை இலங்கை அரசுத் தலைவராகவும், அவருடைய கட்சி பொதுத் தேர்தலில் அமேக வெற்றியை ஈட்டுவதற்கும் காரணமாக அமைந்தது.
சிங்கள மக்கள் தெளிவாக தமது நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். அவர்கள் தமதீப கோட்பாட்டை இறுக்கமாக கையில் பிடித்த வண்ணமே அனுர குமார திசாநாயக்கவை ஆதரவளித்து இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை அவர்கள் கையில் கொடுத்திருக்கின்றனர் என்பதுதான் உண்மையாகும்.
இங்கே தமிழ் மக்களைப் பொறுத்தளவில் ஒரு நீண்ட அரசியல் வரலாற்று பார்வையற்ற, எதிர்கால அரசியல் தெளிவற்ற, அரசியலுக்குள்ளே உள்ள அரசியலை புரிந்து கொள்ள முடியாத அரசியல்வாதிகளும், தமிழ் மக்களுக்கு தலைமை தாங்கவென புறப்பட்டிருக்கும் கல்வி கற்றவர் என்று சொல்லப்படுகின்ற இன்றைய தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்ற தமிழ் பிரதிநிதிகள் யாரிடமும் தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றியோ, தமிழ் மக்களின் எதிர்காலம் வாழ்வு பற்றியோ எத்தகைய ஒரு நிலைப்பாடும் கிடையவே கிடையாது.
நாடாளுமன்ற பதவி மாத்திரமே அவர்களுடைய இலக்கு. நாடாளுமன்றத்தில் உப்புச் சப்பில்லாத பேச்சுக்களை பேசி இன்னும் ஐந்து வருடத்தை இவர்கள் கழிக்கத்தான் போகின்றனர். அதேநேரத்தில் வடக்கில் நீண்ட காலமாக தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளாக தோற்றமளித்த தமிழரசு கட்சி படு தோல்வி அடைந்திருக்கிறது.
ஒத்தோடி அரசியல்வாதிகள் தூக்கி எறியப்பட்டு இருக்கிறார்கள் என்றாலும் புதிய ஒத்தோடிகளை தமிழ் மக்கள் தெரிவு செய்திருக்கிறார்கள் என்பதுதான் துரதிஷ்டமானது. வடகிழக்கை பொறுத்த அளவில் தேசிய மக்கள் சக்தி எட்டு ஆசனங்களை பெற்றிருக்கிறது.
அதே நேரத்தில் வட-கிழக்கில் கோலோச்சிய தமிழரசு கட்சியும் எட்டு ஆசனங்களையே பெற்றிருக்கிறது. அநுர அணியை பொறுத்த அளவில் அவர்கள் வடக்கில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள் என்பது உண்மைதான். அவர்கள் பெற்ற வெற்றிக்கு காரணம் தமிழரசு கட்சி தமிழ் மக்களுடைய எதிர்பார்க்கையை புறந்தள்ளி தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டமை முதல் காரணமாக அமைந்திருக்கிறது.
தமிழ் தலைமைகள் என்று சொல்லப்படுவோர் தமிழ்த் தேசியக் கட்டுமானம் கட்டுமானங்கள் இதனையும் செய்யவில்லை. தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்புகள் எதனையும் நிறைவேற்றவில்லை. யுத்தத்தின் பேரழிவிற்கு பின் தமிழ் மக்களின் பொருளாதாரக் கட்டமைப்பை மாற்றி அமைப்பதற்கு ஏற்ற வகையிலான பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கை எதனையுமே இவர்கள் செய்யவில்லை.
தமிழ் மக்களின் பொருளாதாரம்
யுத்தத்தின் பின் தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கான நிதியங்களை உருவாக்கி புலம்பெயர்ந்த மக்களின் நிதியை ஒன்று திரட்டி பொருளாதாரக் கட்டமைப்பை கட்டமைத்திருக்க முடியும்.
அவ்வாறே சர்வதேச நிறுவனங்களிடமிருந்து நிதியைப் பெற்று வடகிழக்கை விருத்தி செய்திருக்க முடியும். எதனையுமே செய்யாமல் தங்களுடைய பதவிகளை தக்க வைத்துக்கொண்டு அந்தப் பதவிகளின் மூலம் கிடைக்கப்பெறக்கூடிய சலுகைகளை பெற்று தம் வயிறுகளை வளர்த்ததன் வெளிப்பாடு இன்று தமிழர் தேசத்தில் சிங்கள தேசியக் கட்சிகள் முதன்மை பெறத் தொடங்கிவிட்டன.
இது தமிழ் தேசிய சிதைவின், அழிவின் வெளிப்பாட்டை வெளிப்படுத்தி நிற்கிறது. அது மாத்திரமல்ல இந்த சிதைவு என்பது தமிழ் மக்களை மேன்மேலும் அதாள பாதாளத்துக்கு விட்டுச்செல்லப் போகிறது என்பதற்கான கட்டியமாகவும் எம் முன்னே எழுந்திருக்கிறது.
வடக்கின் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பை உற்று அவதானித்தால் வடக்கின் அரச உத்தியோகத்தர்கள் அரைவாசிக்கு மேல் அனுதாபுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. அது மாத்திரமல்ல குறிப்பாக ஆசிரியர் சங்கங்கள் ஊடாக பெருமளவு ஆசிரியர்கள் அநுரவுக்கு வாக்களித்து இருக்கிறார்கள் இந்த ஆசிரியர்கள்தான் நாளைய தலைவர்களை உருவாக்குகின்ற பிரம்மாக்கள் என்றால் நாளைய தலைமுறை எங்கே போய் நிற்கப் போகிறது? இன்னும் ஒரு உண்மையை இங்கே சொல்லித்தான் ஆகவேண்டும்.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்க தயாராகி போராடிய முன்னாள் போராளிகள் பலர் இந்த அநுர அலையில் அடிபட்டு அநுரவுக்காக வாக்கு சேகரித்தனர், சுவரொட்டிகளை ஒட்டினர், பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.
அவ்வாறே இன்னொரு தொகுதியினர் புலம்பேர் தேசங்களில் இருந்து நிதி உதவிகளை பெற்று போராளிகள், மாவீரர் குடும்பங்கள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பணிகளில் ஈடுபட்டவர்களும் இங்கே அநுர கட்சிக்காக வாக்களித்தார்கள் என்பதை இன்னும் ஒரு கொடுமையான செய்தி. இதனை நேரில் கண்ட கண்கண்ட சாட்சியமாக இந்தக் கட்டுரையை வரைகின்ற நானும் ஒருவன் என்ற அடிப்படையில் இந்தப் பந்தியை ரத்தக்கண்ணீர் வடித்து எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் உள்ளேன்.
இந்தத் தேர்தலில் போராளிகள் சார்பில் பலர் போட்டியிட்டார்கள். ஆயிரம் யாழ் மாவட்டத்தில் மாத்திரம் குறிப்பாக வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பகுதியில் போராளி வேட்பாளருக்கான பெருமளவு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன ஆயினும் துரதிஷ்டவசமாக சில வாக்குகளால் அவர் தோல்வியடைந்தார். அவ்வாறு அவர்கள் தோல்வி அடைந்தார் என்பதை விட அவர் போராளிகளால் தோற்கடிக்கப்பட்டார்.
போராளிகளே போராளிகளை தோற்கடித்தார்கள். போராளிகளே போராளிகளை தூற்றினார்கள். போராளிகளே போராளிகளை ஒட்டு குழு என்றார்கள். இதன் இன்னொரு கட்டமாக புலம்பெயர்ந்த தேச முன்னாள் போராளிகளும் இந்தப் போராளிகளுக்கு எதிராகவே செயல்பட்டார்கள்.
ஆக மொத்தத்தில் ““நாய்க்கு நாய் தான் எதிரி““ அவ்வாறே போராளிகளுக்கு போராளிகளை எதிரிகளாக களத்தில் தோற்றமளித்தார்கள் என்பதும் துரதிஷ்டமே. புலம்பெயர்ந்த வாழும் போராளிகளுக்கு தாயகத்தில் தமக்கேற்ற அடியாட்கள் தேவைப்படுகிறார்கள். தமக்கு ஏற்ற வகையான அடியாட்களை தேடியே நிதி உதவியும் அனுப்பப்படுகிறது என்பதை இன்னொரு பக்க உண்மை.
தாயகத்தில் போராளிகள்
தாயகத்தில் போராளிகள் ஒரு திரட்சி பெற்று ஒரு குடைக்கிழ் நிற்கமுடியாது. காரணம் புலம்பெயர்ந்த தேச நாடுகளில் இருந்து அவர்களை பிரிப்பதற்கான நிதி உதவி பெருமளவில் வழங்கப்படுவதும் தமிழினத்தின் சாபக்கேடு. இப்போது யார் ஒட்டுக்குழு என்ற கேள்வி மக்கள் மனதில் தோன்றிவிட்டது.
தமிழீழ விடுதலைக்காக போராடியவர்கள் இப்போது அரசியல்வாதிகளுக்கும் பெரும் பண முதலைகளுக்கும் பிரச்சார பீரங்கிகளாக, கூலிக்கு சுவரொட்டிகளை ஒட்டும் அடியார்களாக வேலை செய்யத் தொடங்கி விட்டனர். இவை அனைத்தும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள போராளிகளின் நிலைமை. இவற்றினை சீர் செய்யாமல் தமிழ் தேசியம் பற்றி எவ்வாறு பேசுவது? பசி வந்தால் பத்தும் பறந்து போய்விடும் இதுவே போராளினதும் மாவீரர் குடும்பங்களினதும் நிலையாகும்.
எனவே தமிழ் மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையேனும் காணாமல் தமிழ் தேசியத்தை கட்டமைப்புச் செய்ய முடியாது என்ற உண்மை கடந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.
தேர்தல் முடிந்த கையோடு மாவீரர் நாள் நிகழ்வு ஆரம்பமாகிவிட்டது. இந்த மாவீரர் நாள் நிகழ்வில் இலங்கை அரசு எந்த தலையிட்டையும் குறிப்பிட்டுச் செல்லக் கூடிய அளவில் செய்யவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. ஆயினும் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயரை வாங்குவதற்கு இதனை ஒரு நல்ல சந்தர்ப்பமாக அநுர அரசு பயன்படுத்தி விட்டது.
இப்போது பெருமளவிலான மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிப்பதற்கு அநுர அரசாங்கம் எந்த தடையும் விதிக்கவில்லை ஆகவே இந்த அரசு ஏதோ தமிழ் மக்களின் காவலன் இதுவே தமக்கு போதுமானது என்ற மனநிலை தோற்றுவித்து விட்டது.
இதனை எதிர்பார்த்துதான் அநுர அரசாங்கமும் மாவீரர்நாள் நிகழ்வில் எந்த தலையீடையும் செய்யவில்லை. மாவீரர் நாள் நிகழ்வில் கூட சிங்கள ராஜதந்திரம் தமிழர்களை வெற்றி கொண்டிருக்கிறது என்பது இன்னொரு பக்க உண்மை. சுய நிர்ணய உரிமை கேட்டு தமது நிலத்தை தாமே ஆள வேண்டும் என்ற வேட்கையோடு தமிழீழமே தமிழர்களின் தாகம் என்று பல்லாயிரம் உயிர்களை அர்ப்பணித்த, தாரை வார்த்துக் கொடுத்த தமிழ்த் தேசிய இனம் இன்று தமக்காக உயிர் நீத்த அந்த உயிர்களுக்கு நவம்பர் 27ல் அஞ்சலி செலுத்தினால் மட்டும் போதும் என்ற நிலைக்கு வந்து விட்டதா? நினைவு கூறுகின்ற இந்தச் சலுகை ஒன்றே போதும் அதுவே பெரிய விடயம் என்று தமிழ் மக்கள் மனதில் தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மையாகும்.
இந்த நிலை தொடருமானால் தமிழ் தேசியம் என்பது மாவீரர் நாளுக்கும் முள்ளிவாய்க்கால் நிகழ்வு நாளுக்கும் மட்டுமே பூக்கும் பூவாக மாறிவிடும். இங்கே இன்னொரு பக்க கொடுமையையும் பார்க்க வேண்டும் நடந்து முடிந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை மும்முரமாக நடத்தியவர்களில் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் அநுர கட்சிக்காக வாக்களித்தவர்களும் அநுர கட்சிக்காக பிரச்சார வேலைகளில் தீயாகச் செயற்பட்டவர்களும் மாவீரர் நாள் நிகழ்வில் முன்னுக்கு முண்டியடித்து நிற்பதை காண முடிந்தது.
என்ன கொடுமை தமிழ் மக்களின் அரசியலில் கடைந்தெடுத்த சுயநலம் மிக்கவர்கள் முன்னணிக்கு வருவது மிக ஆபத்தானது. தமிழர் அரசியலில் இத்தகைய புல்லுருவிகளும் வேடதாரிகளும் காலத்து காலம் முளைப்பர். அவர்களை களையெடுத்து துரத்தியடிக்க வேண்டியது காலத்தின் தேவை. இத்தகையவர்கள் முன்னுரிமை பெறுவதை தமிழ் தேசிய நலன. சார்ந்து சிந்திக்கும் ஒவ்வொரு தமிழனும் தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு வேடதாரிகள் தமிழ் மக்களின் அரசியலில் முன்னிலைக்கு வருவது தமிழ் மக்களுக்கு ஒரு அபயச்சங்கை ஊதுகிறது. தமிழினமே விழித்துக் கொள்! உன்னை நீ உணர்ந்து கொள்! உன் எதிர்காலம் வாழ்விற்கு எது தேவையோ அதனை அறிவார்ந்த ரீதியில் சிந்தி! இல்லையேல் இலங்கை தீவில் தமிழினம் மெல்லச் சாகும்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 03 December, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.