அரசின் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய வரைவு தொடர்பில் சுமந்திரன் அதிருப்தி
இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புதிய வரைவு, சிறுபான்மை இனத் தமிழர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்புகளை கூட பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இக்கருத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் உள்நாட்டுப் போரின் போது கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.
அத்துடன் படையினரின் வேண்டுகோளின் பேரில் சரணடைந்த, சரணடைய செய்யப்பட்டவர்களும் காணாமல் போயுள்ளனர்.
நல்லிணக்க ஆணைக்குழு
இந்தநிலையில், மேற்குலக நாடுகளில் வாழும் தமிழர்கள் ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமைகள் பேரவைக்கு அந்தந்த அரசாங்கங்கள் ஊடாக வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தீர்மானம் ஒன்றின் மூலம் தீர்வு காண முனைப்புக்களை மேற்கொள்கின்றனர்.
இதற்கு மத்தியில், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணையில் வெளிநாட்டின் தலையீட்டை இலங்கை எதிர்த்த போதிலும், 2016 ஆம் ஆண்டு முதல் தென்னாபிரிக்க மாதிரி உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபச மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இருவரும் அண்மையில் தென்னாபிரிக்காவிற்கு பயணம் செய்தனர்.
எனினும் களத்தில் எதுவும் நடக்கவில்லை என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டங்கள்
இந்த விடயத்தில் சில சட்டங்களைக் கொண்டுவர இலங்கை அரசாங்கத் தரப்பினர்
முயற்சிக்கின்றனர்.
ஆனால் மீண்டும் அவர்கள் யாரையும் கலந்தாலோசிக்க முயற்சிக்கவில்லை. அவர்கள் வரைவைக் கொண்டு வந்து தமது கருத்துக் கேட்டனர். ஆனால் கருத்து சொல்ல எதுவும் இல்லை.
அதில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
அத்துடன் பொறுப்புக்கூறல் அல்லது மன்னிப்பு பற்றி அதில் எதுவும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் இன நல்லிணக்கத்திற்கான தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக இலங்கையின் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சட்டத்தை அறிமுகப்படுத்த விரும்புகிறது.
எனினும் ஆயிரக்கணக்கான உறவினர்கள் ஏற்கனவே சுமார் 15 ஆணைக்குழுக்களில் தமது சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும் சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் கடந்தகால மனித உரிமை மீறல்களை நிவர்த்தி செய்வதற்காக காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் என்பவற்றை உருவாக்கியது.
எனினும் அந்த அலுவலகங்கள் முன்னோக்கி நகரவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |