வடக்கு - கிழக்கு தமிழர் அரசியலின் மூத்த ஆளுமை எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம் காலமானார்.
நேற்று(14.11.2026) இரவு11: 50 மணியளவில் காலமானதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவர், கடந்த 3ஆம் திகதி உடல்நலக் குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலக் குறைவு
இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்குச் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சில வாரங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற அவர், பின்னர் வீடு திரும்பியிருந்தார்.
இந்த நிலையில், நேற்று(14.11.2026) அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் களத்தில் நீண்டகால அனுபவம் கொண்ட சிரேஷ்ட அரசியல்வாதியான எம்.கே.சிவாஜிலிங்கம், இராணுவம், பொலிஸ் மற்றும் இராணுவத்தின் ஆதரவுடன் இயங்கிய ஆயுதக் குழுக்களின் தாக்குதல்களுக்கு இலக்காகியும் எதற்கும் அஞ்சாது தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்களிலும் அரசியல் செயற்பாடுகளிலும் தீவிரமாகப் பங்காற்றியவர் ஆவார்.
அரசியல் நகர்வுகள்
2009ஆம் ஆண்டு தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச புலனாய்வாளர்களின் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் நிகழ்வுகளைத் துணிவுடன் முன்னின்று நடத்தி வந்த பெருமை இவரையே சாரும்.
ரெலோ அமைப்பின் மூத்த உறுப்பினராக இருந்த இவர், 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

2013ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போட்டியிட்டு உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு பணியாற்றினார்.
பின்னர் ரெலோ கட்சியிலிருந்து விலகித் தமிழ்த் தேசியக் கட்சியில் பொதுச்செயலாளராகப் பதவி வகித்த அவர், இறுதியாக நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு, தவிசாளராகப் பொறுப்பு வகித்து நகர அபிவிருத்தி மற்றும் நிர்வாகப் பணிகளை முன்னெடுத்து வந்தார்.
அன்னாரது மறைவுக்குத் தமிழ் அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் மற்றும் நலன்விரும்பிகள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலதிக தகவல் - ராகேஷ்