போலி இலக்கத்தகடுகளுடன் பொலிஸாரிடம் சிக்கிய சொகுசு மோட்டார் வாகனம்
களுத்துறை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான உதிரிபாகங்கள் பொருத்தப்பட்ட சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றுடன் உணவக உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றின் இரண்டு பதிவுச்சான்றிதழ்களும், மற்றுமொரு மோட்டார் சைக்கிளின் பதிவுச் சான்றிதழின் பிரதியும் வாகனத்திற்குள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வாகனத்திற்கு பயன்படுத்தப்பட்ட பதிவு இலக்கம் போலியானது எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலி இலக்கத்தகடுகள் கண்டுபிடிப்பு
வீட்டின் முன் சந்தேகத்திற்கிடமான வகையில் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பொலிஸ் குழுவொன்று சென்று முதற்கட்ட சோதனை நடத்தியதில் அதில் பொருத்தப்பட்டிருந்த இலக்கத்தகடு ஒருவருக்கு சொந்தமான மோட்டார் வாகனத்தின் இலக்கத்தகடு எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து உணவக உரிமையாளரை கைது செய்த பொலிஸார், வாகன பதிவு இலக்கங்களை சோதனை செய்த நிலையில், கணினி அமைப்பில் வாகனம் பதிவு செய்யப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இதன்பின்னர் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, தற்செயலாக விமான நிலையத்தில் சந்தித்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபர் மூலம் நுவரெலியாவிலிருந்து வந்த நபரிடம் இருந்து 600,000 ரூபாவுக்கு மோட்டார் வாகனத்தை வாங்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனம் ஏதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரை ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |