விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் உயிருடன் இல்லை! இலங்கை அரசாங்கத்தின் அறிவிப்பு
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நாளாந்தம் பாதுகாப்பு சபை கூட்டம் இடம்பெறுகின்றது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்ற நிலையிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனவும், அவர் விரைவில் வெளிவருவார் என்றும், உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் நேற்று அறிவித்திருந்த நிலையில் அதனை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளதுடன், பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு
இந்த நிலையில், இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்கள் அமைச்சர் பந்துலவிடம், அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பியிருந்தனர்.
இது குறித்து அமைச்சர் பந்துல தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
இதற்கு பதிலளித்த அவர் , 'புத்த பெருமான் இலங்கையில் தான் பிறந்தார் என்று சிலர் கூறுகின்றனர். பேச்சு சுதந்திரம் அனைவருக்கும் உண்டல்லவா? என கூறினார்.
எவ்வாறிருப்பினும் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் , நாட்டில் முதலீடுகளுக்கு புலம்பெயர் தமிழர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள நிலையில், இவ்வாறானதொரு கருத்து வெளியிப்படுகின்றமை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்லவா? என்று மீண்டும் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் பந்துல,
தேசிய பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நாளாந்தம் பாதுகாப்பு சபை கூட்டம் இடம்பெறுகின்றது. அதற்கமைய புலனாய்வு தகவல்கள் உள்ளிட்ட சகல தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட்டு வருகிறது.
எனவே அது குறித்து பிரிதாக கலந்துரையாடுவது நியாயமானது என்று நான் எண்ணவில்லை.
நாட்டைப் பாதுகாப்பதும் நாட்டில் அனைத்து மக்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவே அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.