லங்கா பிரீமியர் லீக் போட்டியில் ஒவ்வொரு ஆறு ஓட்டத்திற்கும் பத்தாயிரம் ரூபாய்
லங்கா பிரீமியர் லீக் போட்டி தொடரில் அணி வீரர்கள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு ஆறு ஓட்டத்திற்கும்10,000 ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
மார்பக புற்று நோய் சிகிச்சைகளுக்காக நிதி திரட்டும் நோக்கில் இவ்வாறான ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆறு ஓட்டத்திற்கும் 10 ஆயிரம் ரூபாய், ஒரு விக்கெட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய், ஒவ்வொரு 4 ஓட்டத்திற்கும் 4 ஆயிரம் ரூபாய் திரட்டப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் பிங்க் டே
லங்கா பிரீமியர் லீக் “பிங்க் டே” என்ற தொனிப் பொருளில் மார்பகப் புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நிதி திரட்டும் நோக்கிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டம் இந்த ஆண்டு எல்.பி.எல் போட்டி தொடரின் இறுதிப்போட்டியின் இறுதி பந்து வரையில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய தினம் முதல் இந்த நிதி திரட்டும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்பக புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் எல்.பி.எல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் பிங்க் நிற ஆடைகளை அணிந்து போட்டிகளில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |