சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு - மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நிற்கும் மக்கள்
இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கு லிட்ரோ மற்றும் LAUGFS Gas நிறுவனங்கள் அண்மையில்ழ அனுமதி கோரியிருந்தன.
எனினும், விலை அதிகரிக்கப்படாத பின்புலத்தில் LAUGFS Gas நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை எடுத்தது.
இந்த நிலையில் நாட்டில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் இந்த விடயத்தை அவதானிக்க முடிந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
எனினும், சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு நீங்கும் வகையில், ஒரு இலட்சம் வீட்டு பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளாந்தம் சந்தைகளுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தைகளுக்கு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவுவதாக அச்சமடைய வேண்டாம் என பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள அதேநேரம், நாட்டிற்கு தேவையான சமையல் எரிவாயு தமது நிறுவனத்திடம் உள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
