தொடரும் கனமழை! வெள்ளத்தில் மூழ்கும் கிழக்கு மாகாணம்
கந்தளாய் பிரதேசத்தில் நேற்று(25) இரவிலிருந்து பெய்து வருகின்ற மழை காரணமாக பேராறு இரண்டாம் கொலனி, மூன்றாம் கொலனி, மதுரசா நகர் போன்ற தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
அத்தோடு,வடிகான்களிலும் நீர் நிரம்பி வழிகின்றன இதனால் ஒரு சில பகுதிகளில் வீதிகள் மற்றும் தாழ் நிலப்பகுதிகளில் மழை நீர் நிரம்பியுள்ளதால் வீதிகள் தடைப்பட்டுள்ளது.
வேண்டுகோள்
கந்தளாய் பிரதேசத்தில் திட்டமிடல் இல்லாத வீதி அமைப்பினால் ஏற்பட்ட வடிகான்களால் சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சரியான வடிகான்களை அமைத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
அம்பாறை
அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.
இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக அம்பாறை கொண்டைவட்டுவான் குளத்தின் நீர் சுமார் ஆறு அங்குலம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அம்பாறை-இகினியாகல வீதியில் போக்குவரத்துக்கு சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது.
கொண்டைவட்டுவான் நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.மேலும் அருகில் உள்ள குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இகினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 77 அடி ஒன்பது அங்குலம் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத் துறை தெரிவித்துள்ளது.
செய்தி-ஷிஹான் பாறுக்
