பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ள கொடுப்பனவு : வங்கிக் கணக்குகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு
அஸ்வெசும நிவாரணத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவாகப் போகும் பயனாளர்கள் தாம் தெரிவு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே புதிய அஸ்வெசும வங்கிக் கணக்கைத் திறக்க வேண்டும் என்று நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் ஸ்ரீனிவாசன் கிரிதரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முதற்கட்டத்திற்கு தெரிவாகாமல் மேன்முறையீடு செய்து அதன் ஊடாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு பெப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
5 இலட்சம் பயனாளிகளின் விபரங்கள் மீள் பரிசீலனை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதற்கட்ட நிவாரணம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகளில் 5 இலட்சம் பயனாளிகளின் விபரங்கள் எமது சபையின் ஊடாக மீள்பரிசீலனை செய்யப்பட்டு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஒரு இலட்சம் பேரின் மேன்முறையீடுகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே மேன்முறையீட்டின் ஊடாக தெரிவாகப்போகும் பயனாளர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நிவாரணத்தொகை வழங்கப்படவுள்ளது.
அஸ்வெசும கணக்கு
அதற்கு முன்னதாக குறித்த பயனாளர்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக தரப்படும் கடிதத்தை பெற்றுக்கொண்டு பிரதானமாக 5 வங்கிகளில் அஸ்வெசும கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.
அதாவது இலங்கை வங்கி, மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி மற்றும் அமானா வங்கி ஆகியவற்றில் தமது கணக்குகளை ஆரம்பிக்க முடியும்.
ஏற்கனவே மேற்குறிப்பிடப்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதே வங்கிகளில் பிரதேச செயலகத்தினால் தரப்பட்ட கடிதத்தை காட்டி, இதற்கென பிரத்தியேகமாக புதிய கணக்கொன்றை திறக்க முடியும்.
அதேபோன்று இரண்டாம் கட்டத்துக்கு தெரிவாகப்போகும் பயனாளர்களும் தாம் தெரிவு செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே புதிய அஸ்வெசும கணக்கை திறக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |