இலங்கை மக்களுக்கு நற்செய்தி! ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் திட்டம்
அஸ்வெசும (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் திட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த நலன்புரி கொடுப்பனவுகள் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
வழங்கப்படும் உதவித் தொகைகள்
அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் ´அஸ்வெசும´ திட்டத்தின் கீழ் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
அதற்கமைய தற்காலிக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்திருக்கும் மக்களுக்கு 2,500 ரூபாய் மாதாந்த கொடுப்பனவு 2023 டிசம்பர் 31 வரையிலும் வழங்கப்பட இருப்பதோடு பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளோருக்கான 5,000 ரூபாய் கொடுப்பனவு 2024 ஜூலை 31 வரையிலும் வழங்கப்படவுள்ளது.
மேலும் வறியோர் என்று அறியப்பட்ட பயனாளிகளுக்கு 8,500 ரூபாய் கொடுப்பனவும் மிக வறுமையானவர்களுக்காக மாதாந்தம் 15,000 கொடுப்பனவும் 2023 ஜூலை 01 முதல் மூன்று வருட காலத்திற்கு வழங்கப்படவுள்ளன.
தற்போது நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் வீதமும், சிறுநீரக பாதிப்புக்கான நிவாரணங்களை பெறும் நபர்களுக்கு 5,000 ரூபாய் வீதமும் முதியவர்களுக்கான கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு 2,000 ரூபாய் என்ற அடிப்படையிலும் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.
மேற்படி நலன்புரி நன்மைகள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள 340 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 3,712,096 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்த நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டத்திற்கு தகுதியானவர்களை கண்டறிவதற்கான திட்டத்தில் தகவல்களை சரிபார்க்கும் பணிகளில் 91.5% சதவீதம் நேற்று (08) நிறைவடைந்திருந்தது.
பிரதேச செயலாளர் பிரிவுகளில் மூவர் அடங்கிய தெரிவுக்குழு ஒன்றின் கீழ் தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
You may like this Video

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri
