அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் விசேட வேலைத்திட்டம்: இராஜாங்க அமைச்சர் தகவல்
அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (20.03.2024) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அஸ்வெசும பயனாளிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்த எதிர்பார்க்கப்படுவதோடு, 2000 ஹெக்டயாரில் தேயிலை நடுகைச் செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் மீன்பிடித் தொழிலுக்கு விசேட கடன் நிவாரணம் வழங்கும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், கடற்றொழில் அமைச்சு, சமூக வலுவூட்டல் அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி வங்கியுடன் இணைந்து உவர் - நன்னீர் கடற்றொழில் குடும்பங்களை வலுவூட்டுவதற்கான சலுகைக் கடன்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடல் அட்டை உற்பத்திக்காக 400 குடும்பங்களுக்கு சலுகைக் கடன் வழங்கப்படவுள்ளது. மீன்பிடி படகுகள் உள்ளிட்ட மீன்பிடித் தொழில்துறைக்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதே இத்திட்டதின் பிரதான நோக்கமாகும்.
கள்ளு அனுமதி
மேலும் பனை, கித்துல், தென்னை போன்ற உற்பத்திகளுக்கு தரப்படுத்தப்பட்ட “கள்ளு அனுமதி” வழங்குவதற்கான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகிறது. செயற்கை உற்பத்திகளுக்கு மாறாக, இயற்கை மதுபான உற்பத்தியை மேற்கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் ஊடாக களுத்துறை மற்றும் குருநாகல் மாவட்டங்களை மையமாகக் கொண்டு 10,000 நாட்டுக் கோழி வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவும் எதிர்பார்க்கிறோம். உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |