கொழும்பில் மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்ட கும்பல் : பெண் தலைமறைவு
லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றி பெற்றதாகக் கூறி பெண்கள் மற்றும் ஆண்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபத்கொட தனியார் வங்கிக் கிளைக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று முன்தினம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை மூலம் இதுவரை 18 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும், இது தொடர்பில் பொலிஸாருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அவர் கைது செய்யப்பட்ட போது, ஒரு வெளிநாட்டு ஏடிஎம் அட்டைகள், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் அறுபதாயிரம் ரூபாய் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இவர் போதைப்பொருளுக்கு கடுமையாக அடிமையானவர் எனவும், அப்போது அவரிடமிருந்த 3420 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட பெண் ஒருவரை கைது செய்ய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறித்த பெண் சிம் அட்டை கடை நடத்தி வருபவர் எனவும் தகவல் கிடைத்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களனி, எரியவட்டிய பிரதேசத்தில் தற்காலிகமாக வசிக்கும் 32 வயதுடைய திருமணமாகாதவர் எனவும் தெரியவந்துள்ளது.