முள்ளிவாய்க்கால் தந்த இழப்பு: தன்னை இழந்து தியாகிக்கும் பெண்
முள்ளிவாய்க்கால் தந்த இழப்புக்கள் எண்ணிலடங்காதவை. துயரமிகு இழப்புக்களை கடந்து சவால் மிகுந்த வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் ஈழத்தமிழினம் மழை விட்ட பின்னும் அதன் தூறல் விடவில்லை என்பது போல் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.
நடந்தவை எல்லாம் நேற்றுப் போல் இருக்கிறது. நடந்ததையெல்லாம் என்றும் மறந்துவிட முடியாத ஒரு நிகழ்வாக முள்ளிவாய்க்கால் நிகழ்வின் பதிவுகள் அதனை களத்தில் இருந்து அனுபவித்தவர்களிடம் இருக்கின்றது.
மனதைப் பாதித்த பல விடயங்களில் இருந்து மனிதர்களை மீட்டெடுத்து இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வருவதற்கான ஒரு சிகிச்சை முறையாகவே உளவளத்துறை இருக்கின்றது.
அதனால் கூட சில மனிதர்களின் ஆழ்மனப் பதிவுகளை நீக்கி அவர்களை அதிலிருந்து மீட்டெடுத்து இயல்பான வாழ்க்கை நீரோட்டதில் கலந்திடச் செய்ய முடியாது. அத்தகைய இயல்புகளோடு இன்றும் வாழ்ந்து வருகின்றனர் முள்ளிவாய்க்காலில் தம்மைத் தொலைத்துவிட்டதாக கூறிக்கொள்ளும் பல ஈழத்தமிழர்கள்.
தமக்குரிய கடமைகள் என சிலதை வரித்துக்கொண்டு அதற்காக தம்மை அவர்கள் தியாகித்து வருவது ஆச்சரியமளிக்கும் விடயமாக இருக்கின்றது என முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் தொடர்பில் உளவள ஆலோசகர் ஒருவர் தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டிருந்தார்.
தாயாகிய வாழும் வாழ்வு
முள்ளிவாய்க்காலின் கடைசி நாட்களில் தாய் தந்தையரை பறிகொடுத்த இரு சிறுமிகளின் வாழ்வு பற்றியும் அவர் தன்னுடைய ஆய்வுக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
ஒரு சிறுமிக்கு ஐந்து வயது. மற்றையவளுக்கு மூன்று வயது இருக்கும். தந்தை ஒரு போராளி. தாயும் கூடவே.எறிகணை ஒன்றுக்கு இருவரும் ஒரு இடத்தில் தங்கள் உயிரை பறிகொடுக்க நேர்ந்திருந்தது.
தாயின் பெற்றோர் இரு சிறுமிகளையும் தங்களோடு எடுத்துச் சென்றிருந்தாக அவர்களது உறவினர்கள் மூலம் தாம் அறிந்து கொண்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இரு சிறுமிகளின் தாயின் தங்கை இந்த இரு பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் கொண்டிருந்த கரிசணையினால் தான் திருமணம் செய்து கொள்ளாது இரு சிறுமிகளையும் கவனமெடுத்து வளர்த்து ஆளாக்கிவருவதாக அவர்கள் வாழும் ஊரின் மக்களிடையே மேற்கொண்ட தேடலின் போது அறிய முடிகின்றது.
திருமணம் பேசி வந்திருந்ததாகவும் அந்த பேச்சு முற்றாகிய போதும் அதனை வேண்டாம் என அந்த தங்கை மறுத்திருந்ததாகவும் அவ்வூரில் அவர்களை நன்கு அறிந்திருந்த வயோதிபர் ஒருவர் குறிப்பிட்டார்.
எப்படியாகிலும் இருவருக்கும் நல்ல எதிர்காலத்தினை அமைத்துக்கொடுக்க வேண்டும் என அவர் அடிக்கடி பேசிக்கொள்வதாகவும் அவரின் நட்புவட்டாரங்களைச் சேர்ந்தவர்கள் அவர் பற்றிய கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
பெற்ற பிள்ளைகள் போல் அன்பு செலுத்துவதிலும் கண்டிப்பாக நடந்து நெறிப்படுத்துவதிலும் அவர் காட்டிவரும் அக்கறை ஆச்சரியமளிப்பதாக இருக்கிறது என அந்த பிள்ளைகள் இருவருக்கும் கல்வி பயிற்றுவித்திருந்த ஆசிரியர் ஒருவரும் அந்த தங்கையின் பொறுப்புணர்ச்சி தொடர்பில் குறிப்பிட்டிருந்தார்.
இருவரும் இரு வேறு இடங்களில்
தந்தையின் உறவினர்கள் வீட்டில் மூத்தவளும் தாயின் உறவினர்கள் வீட்டில் இளையவளுமாக வளர்ந்து வந்த நாட்களும் உண்டு.
பாடசாலை விடுமுறை நாட்களில் இருவரும் இரு வீடுகளிலும் மாறி மாறி பயணப்பட்டு வருவதும் உண்டு. இத்தகைய அணுகு முறையானது இரு பிள்ளைகளுக்கும் பெற்றோர் இல்லை என்ற மனவுளைச்சலை ஏற்படுத்தாது.
தமக்கும் தம்மைத் தாங்கி தமது நல்லது கெட்டதுகளில் அக்கறை காட்டும் சொந்தம் இருப்பதாக உணர வைக்கும். இந்த உணர்வு அவர்களின் மனதின் ஆரோக்கியமான சூழலுக்கு அவசியமாகும் என உளவள ஆலோசகர் இது தொடர்பில் தனது அவதானிங்களை எடுத்துரைத்து இருந்தார்.
அப்பாவோட சொந்தம் அம்மாவோட சொந்தம் என்ற உரிமை கொள்ளலுக்கு தாயாகி தன்னை அவ்விரு பிள்ளைகளுக்காக உருக்கும் அந்த பெண்மணி கருதியிருக்க வேண்டும் என்பது உளவியல் நோக்கமாகும்.
உயிரியல் பாடத்துறையில் கல்வி
மூத்தவளை உயர்தர உயிரில் பாடத்துறையில் கற்றலை மேற்கொள்ள ஊக்குவித்த உறவினர் அவளை பல்வைத்தியராக பல்கலைப்படிப்பை தொடர வைத்துள்ளனர்.
இளையவளை உயர்தர உயிரியல் பாடத்துறையில் கற்றலை மேற்கொள்ள வழிகாட்டி வருகின்றனர் என இரு சிறுமிகளின் கற்றல் மற்றும் அவர்களது எதிர்காலம் பற்றிய கேட்டல்களுக்கு தான் அறிந்ததில் இருந்து பதிலுரைத்திருந்தார் உளவள ஆலோசகர்.
உயிரியல் துறையில் கற்றலை மேற்கொள்ளும் அவர்களின் பட்டப்படிப்புக்கள் அந்த துறைசார்ந்ததாகவே இருக்கும்.ஆகவே அவர்களது எதிர்காலம் நன்றாகவே இருக்கும்.
சமூகத்தில் உயர் கல்வியலாளர்களாகவும் உயர்ந்த சம்பளத்தினை பெற்றுக்கொள்ளக் கூடிய தொழில்களை வழங்கக்கூடியதாகவும் உயிரியல் கல்வியின் போக்கு இருப்பதனை எடுத்துக் காட்டியிருந்தார்.
தியாகத்தின் உச்சம்
முள்ளிவாய்க்கால் போரின் வடுக்களில் ஒன்றாக இங்கே விபரிக்கப்படும் பெற்றோரை இழந்த இரு குழந்தைகளுக்காக தன்னைத் தாயாக்கி உருக்கும் அந்த பெண்மணியின் தியாகம் போற்றப்பட வேண்டும்.
சாட்டுக்கு பாக்கும் பழக்கம் என்ற நிலையும் இருக்கும் சமவேளையில் இந்த சமூகத்தில் இரு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக தனது வாழ்வை அர்ப்பணிக்கும் மனப்பக்குவம் எப்பேர்ப்பட்டது என சமூகவிட ஆய்வுகளில் ஆர்வம் காட்டிவரும் வரதன் இது தொடர்பில் தன் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
தனது தமக்கையின் குழந்தைகள் என்ற உணர்வற்று தன் குழந்தைகள் போல் பாவனை செய்து கொள்ளும் மனவுணர்வையும் பாராட்டியிருந்தார்.
அவ்விரு குழந்தைகளும் தங்களின் வாழ்வை தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர்களின் குழந்தைகள்.அவர்களது தியாகம் போற்றப்பட வேண்டும்.அதற்கான கைமாறினை இந்த ஈழத்தமிழ்ச் சமூகம் வழங்க வேண்டிய சூழலில் இருப்பதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
களத்தில் நின்று போராடி வீரச்சாவடையும் ஒரு வீரனின் மனநிலைக்கு சமமாக இந்த தாயின் மனநிலையை ஒப்பிட்டு நோக்க முடியும்.
மக்களின் விடுதலைக்காக தன்னுயிரையும் இழக்கத் துணிந்து காரியமாற்றி ஈற்றில் கொண்ட கொள்கைக்காக தன்னுயிரை இழந்து வீரகாவியமாகும் அந்த வீரர்களின் மனநிலை தேசவிடுதலைக்காக தியாகித்தலை மேம்படுத்தியிருந்தது.
அது போலவே குழந்தைகளாக இருந்த இருவரின் எதிர்காலத்தினை வளமாக அமைத்துக் கொடுப்பதற்காக தன்னுடைய வாழ்வை தியாகித்தலையும் கருத வேண்டும்.
திருமணமானால் தனக்கென பொறுப்புக்கள் இருக்கும்.அதனிடையே இவ்விரு குழந்தைகளையும் பராமரித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி எதிர்கால வாழ்வை வளமாக்கிக் கொடுத்தல் முடியாது போகலாம் என்ற எதிர்நோக்குச் சிந்தனையின் வெளிப்பாடாகவே திருமணம் செய்து கொள்ளாது பிள்ளைகளை பார்த்துக்கொள்ள எடுத்த முடிவை நோக்க வேண்டும் என அவர் தன்னிலை விளக்கமளித்திருந்தார்.
இது போல் முள்ளிவாய்க்கால் தந்த இழப்பின் விளைவாக தோன்றிய சவால்களை எதிர்கொண்டு களமாடும் பலர் உலகப் பரப்பில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர். அவர்களும் களத்திடைப் போராளிகளாகவே வாழ்கின்றனர் என்பது வெள்ளிடை மலையாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |