இலங்கையில் நீண்ட நேர மின்வெட்டுக்கான அனுமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையில் நாளை முதல் நீண்ட நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்த முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி நாளை முதல் நீண்ட மின்வெட்டினை நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கையொன்றை இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ளது.
கோரிக்கை மறுப்பு
இந்த நிலையில் குறித்த கோரிக்கையை அங்கீகரிக்க பொதுச் சேவைகள் பயன்பாட்டு ஆணைக்குழு மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் முறையான காரணங்களால் மின்வெட்டு நீடிப்பை நியாயப்படுத்தாததன் காரணமாகவே குறித்த கோரிக்கையை நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை நீடிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நிலக்கரி இறக்குமதி
இதேவேளை, நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்துக்குத் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வது தொடர்பில் பொறுப்பான தரப்பினர் இன்னும் சரியான இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் அண்மையில் கூறியிருந்தது.
நிலக்கரியை இறக்குமதி செய்ய ஒப்புக்கொண்ட அதே நிறுவனத்திலிருந்தே நிலக்கரி இறக்குமதி செய்யப்படுமா அல்லது மீண்டும் டெண்டர் கோரப்படுமா என்பதை உறுதியாகக் கூற முடியாது என்று அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் அரசாங்கம் இன்று இறுதித் தீர்மானமொன்றை எட்டும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளதுடன், அக்டோபர் மாத இறுதிக்குள் தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டால் சுமார் 8 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.