பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் போது கட்டாயமாக்கப்பட்டுள்ள விதிமுறைகள்
நாட்டில் கோவிட் மூன்றாவது அலை மிக வேகமாக பரவி வரும் நிலையில், கல்முனை பிராந்திய சுகாதார பிரிவுகளிலும் சம்மாந்துறை பிரதேசத்திலும் கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், மேலும் இதே நிலைமை தொடருமாயின் முற்றாக முடக்க வேண்டிய சாத்தியம் உள்ளதாக கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய சம்மாந்துறை கோவிட் பாதுகாப்பு செயலணிக் குழு விசேட கூட்டம் நேற்று மாலை சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இக்கூட்டத்தில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர், பிரதேசசபை தவிசாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ முகாம் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் வேளையில் பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றிய தீர்மானம் எடுக்கப்பட்டன. அவை பின்வருமாறு,
1. சம்மாந்துறை பொதுச்சந்தையில் உட்பகுதி மூடப்படும் என்பதுடன் மருந்தகங்கள் (பாமசி), பலசரக்குக் கடைகள் மற்றும் விவசாய இரசாயன விற்பனை நிலையங்கள் தவிர்ந்த சகல அத்தியாவசியமற்ற கடைகளும் குறிப்பாக ஹோட்டல்கள் மற்றும் சிகையலங்கார நிலையங்கள் (சலூன்) உட்பட சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும்.
2. பாதையோர வியாபார நடவடிக்கைகள் யாவும் முற்றாக தடை செய்யப்படுவதுடன் நடமாடும் வியாபார நடவடிக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
3. நடமாடும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் மீன் மற்றும் மரக்கறி வியாபாரிகள் கண்டிப்பாக ஆன்டிஜென் பரிசோதனை அறிக்கையை உடன் வைத்திருப்பதுடன், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பேணி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல் வேண்டும்.
4. எழுமாறான ஆன்டிஜென் பரிசோனைகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் என்பதுடன் இதற்கு சகல பொதுமக்களும் வியாபாரிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
5. அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்காக மாத்திரம் ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ஒருவர் மாத்திரம் வெளியிடங்களுக்கு வர முடியும் என்பதுடன் சிறுவர்கள் மற்றும் முதியோர்களை அழைத்து வருவது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது.
6. பொது இடங்களில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் பொதுமக்கள் கூடுவதை முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், கட்டாயமாக முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி போன்ற சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது கண்டிப்பாக்கப்பட்டுள்ளது.
7. மத நிறுவனங்களில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட முடியாதென்பதோடு முஸ்லிம் சமய மற்றும் இந்து கலாச்சார திணைக்களங்களின் சுற்று நிருபங்களை பின்பற்றி நடக்குமாறும் வேண்டப்படுகின்றீர்கள்.
மேற்படி தீர்மானங்களை புறக்கணித்து நடப்பவர்களுக்கு எதிராக எந்தவித தயவுதாட்சணியமும் இன்றி சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளால் தனிமைப்படுத்தல் விதிகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும். என்பதையும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு கண்டிப்பாக அறியத்தருகின்றோம்.
இதேவேளை பயணக் கட்டுப்பாடு இன்று அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்று இரவு 11 மணி தொடக்கம் அமுலுக்கு வருகிறது.
இவ்வாறு அமுலுக்கு வரும் பயண கட்டுப்பாடு, 31ஆம் திகதி அதிகாலை 4 மணிக்குத் தளர்த்தப்பட்டு மீண்டும் அன்று இரவு 11 மணிக்கு அமுல்படுத்தப்படும் பயண கட்டுப்பாடு, ஜூன் மாதம் 4ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, அன்றைய தினம் இரவு 11 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டு, ஜூன் மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கே மீண்டும் தளர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நேரத்திலேயே குறித்த தீர்மானங்களை பின்பற்றி மக்கள் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

