சுவிசில் முடக்கமா? வெளியானது அறிவிப்பு
கடந்த 18. 12. 2020 சுவிஸ் அரசு மகுடநுண்ணித் தொற்றிற்கு (Covid-19) எதிரான தமது இறுக்கமான முடக்க நடவடிக்கைகளை அறிவித்திருந்தது.
நோய்ப்பெருந்தொற்று சூழலை அவதானித்துவந்த சுவிஸ் அரசின் சுகாதாரத்துறையின் நோய்த் தடுப்புச் செயலாக்கக்குழுவின் மதியுரைக்கு ஏற்ப தாம் புதிய அறிவிப்புவிடுவதைக் கைவிடுவதாக இன்று சுவிற்சர்லாந்து நடுவனரசு ஊடக அறிக்கை ஊடாகத் தெரிவித்துள்ளது.
நடுவனரசு கடந்த முறை அறிவித்திருந்த அனைத்து விதிகளும் தற்போதைய சூழலிற்குப் பொருத்தமாக இருப்பதால் தாம் புதிய அறிவித்தல் எதனையும் விடுக்கவில்லை எனவும் 30.12.2020 அறிக்கையில் சுவிஸ் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
பனிச்சறுக்கு விளையாட்டுத் திடல்களுக்கு சுவிஸ் அரசு பொது அறிவித்தலை விடுக்காது அதற்கான அனுமதிகளை மாநில அரசு அளிக்கலாம் என அறிவுறுத்தியிருந்தது.
இதன்பயன் சுவிற்சர்லாந்து நாடுமுழுவதும் மாநிலங்களுக்கு மாநிலம் பனிசறுக்கும் திடல்களில் மாறுபட்ட விதிகள் நடைமுறையில் உள்ளன.
தென்னாப்பிரிக்கா மற்றும் பிரித்தானியாவில் புதிதாக மாறுபாடு அடைந்து உருமாறிய புதிய வகை மகுட நுண்ணியின் தொற்றுத் தொடர்பில் தாம் மிகுந்த கவலைகொண்டுள்ளதாகவும் சுவிஸ் அரசு இவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய உருமாறிய நுண்ணி இதுவரை அறியப்பட்ட வகைத் தொற்றைக்காட்டினும் வேகமாக நோய்பரவுவது அறியப்பட்டுள்ளதாக இவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆனால் இதன்பொருள் இப்புதுவுரு கொண்ட நுண்ணி மற்றயைதைக்காட்டிலும் அதிக பக்கவிளைவுகளை அல்லது நோய்த்தாக்கத்தினை ஏற்படுத்துகின்றது என்பதில் விஞ்ஞானரீதியாக உண்மையில்லை எனவும், அதுபோல் இது தடுப்பூசிக்கு கட்டுப்படாது எனும் செய்தி தவறெனவும் சுவிசரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 06. 01. 2021 புதிய மதிப்பீடு
சுவிற்சர்லாந்து அரசு நோய்த்தொற்றுச் சூழலை மீளாய்வு செய்து எதிர்வரும் 06. 01. 2021 புதிய மதிப்பீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
தற்போது தொகையளவில் தொற்று அதிகமாக இருப்பினும், புதிய அறிவிப்பு செய்ய வேண்டிய அளவிற்கு தாக்கம் இல்லாமையால் தாம் புதிய நடவடிக்கையினை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளது.
சுவிசின் தற்போதைய சூழல்
30. 12. 2020 புதன்கிழமை சுவிஸ் அரசின் தகவலின்படி 5424 புதிய மகுடநுண்ணித் (கோவிட்-19) தொற்றுக்கள் புதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 7 நாட்களின் சராசரி தொற்றுத்தொகை நாளுக்கு 3349 என அமைந்துள்ளது. இது கடந்த கிழமைக்கு முன்னமைந்த கிழமையைக்காட்டினும் 20 வீதம் குறைவாகும்.
96 ஆட்கள் இறப்பெய்தி உள்ளனர். 303 ஆட்கள் மருத்துமனையில் மருத்துவம் செய்துள்ளனர்.
தடுப்பூசி – உயிரிழப்பு
லுட்சேர்ன் மாநிலத்தில் தடுப்பூசி இடப்பட்ட 91 வயது மூதாளர் ஒருவர் இறந்திருந்தார். இவரது இறப்பிற்கும் தடுப்பூசிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சுவிற்சர்லாந்து நாட்டின் மருந்துக்கட்டுப்பாட்டுத் திணைக்களம் “சுவிஸ்மெடிக்” தெரிவித்துள்ளது.
முன்னரே பல நோய்களுக்கு ஆட்பட்டிருந்த முதியவர் தடுப்பூசி இடப்பட்ட பின்னர் இறந்தார்.
அவருக்கு தடுப்பூசி இட்ட மூதாளர் இல்லம் ஊடாக லுட்சேர்ன் மாநில சுகாதாரத்துறை இவர் தொடர்பான கோப்பினை சுவிஸ் மருந்துக்கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அனுப்பி இருந்து.
மாநில அரசசுகாதார அதிகாரிகள் மற்றும் சுவிஸ்மெடிக் அதிகாரிகளின் உசாவலின் (விசாரணை) நிறைவில் தடுப்பூசி இடப்பட்டதற்கும் இறப்பு நடைபெற்றதற்கும் தொடர்பில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
91 வயது மூதாளர் தடுப்பூசி இடப்படுவதற்கு முன்னர் பல் நோய்களுக்கும் ஆட்பட்டிருந்ததும், அந்நோய்களின் போக்கே இறப்பிற்கு அடிப்படைக் காரணம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2021 புத்தாண்டு நற்செய்தியை எடுத்துவரட்டும்!
தொகுப்பு: சிவமகிழி