பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடு தளர்வுகள் ஒத்திவைப்பு! - பிரதமர் விசேட அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, ஜூலை 19ம் திகதி முழுமையாக கோவிட் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
டவுனிங் வீதியில் இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு வேகமாக பரவி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரித்தானியாவில் அமுலில் உள்ள கோவிட் கட்டுப்பாடுகள் ஜூன் 21ம் திகதி முமையாக நீக்கப்படவிருந்தன. அரசாங்கம் இதற்கான அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே, கட்டுப்பாடுகளை முழுமையாக தளர்த்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் கணிசமான மக்கள் கோவிட் தடுப்பூசியில் இரண்டாவது அளவை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமையும் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
நான்கு வார கால தாமதம் ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் என்று அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. கட்டுப்பாடுகளை தளர்த்தும் நடவடிக்கை ஜூலை 19ம் திகதிக்கு ஒத்திவைப்பது வைப்பது விவேகமானதாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் ஒவ்வொரு நாளும் நிலையை கண்காணிப்போம், இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஆபத்து குறைந்துவிட்டது என்று முடிவெடுக்கப்பட்டால் நாட்டை முழுமையாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, பிரித்தானியாவில் கடந்த ஆறு நாட்களில் ஒவ்வொரு நாளும் 7,000 க்கும் மேற்பட்ட கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் டெல்டா மாறுபாடு இப்போது 90 வீதத்திற்கு அதிகமான புதிய வழக்குகளைக் கொண்டுள்ளது.
டெல்டா மாறுபாடு ஆல்பா மாறுபாட்டை விட 40 வீதம் முதல் 80 வீதம் வரை வேகமாக பரவக்கூடியது என்றும், இதனால் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை விரைவாக உயரும் என தரவு தெரிவிக்கிறது.
வழக்குகள் ஒவ்வொரு வாரமும் சுமார் 64 வீதம் அதிகரித்து வருகின்றன. வைத்தியசாலைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயரத்தொடங்கியுள்ளது.
நோய் தொற்றுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை "அதிவேக பாதையில்" தொடர்ந்தால், NHS"சிக்கலில் சிக்கக்கூடும்" என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி எச்சரித்துள்ளார்.