தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதால் யாழில் இரண்டு கோயில்களுக்கு பூட்டு
யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு கோயில்களின் அறங்காவல் சபையினர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கோயிலில் பூஜைகளை நடத்தியதன் காரணமாக இன்று முதல் 14 தினங்களுக்கு கோயில்களை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை சுகாதார அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பருத்தித்துறை சுப்பர்மடம் பிரதேசத்தில் உள்ள முனியப்பர் கோயில் மற்றும் சிவன் கோயிலில் வருடாந்த திருவிழா பூஜைகளில் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றாது கலந்து கொண்டதாக சுகாதார அதிகாரியின் அலுவலகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் இரண்டு கோயில்களையும் 14 நாட்களுக்கு சீல் வைத்து மூடியுள்ளதாக அறிவித்துள்ளனர்.
பருத்தித்துறை பிரதேசத்தில் கொரோனா பரவும் கடுமையான ஆபத்து இருப்பதுடன் அங்கு ஏற்கனவே 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதனால், எவ்வித வைபவங்களிலும் கலந்து கொள்ள வேண்டாம் என சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.




