இலங்கையில் மீண்டுமொரு தேர்தல்! தீர்மானத்தை வெளியிட்டது அரசாங்கம்
2025ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கண்டியில் வைத்து செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) இந்த தீர்மானம் குறித்து அறிவித்துள்ளார்.
விரைவில் தேர்தல்
மேலும், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, புதிதாக வேட்புமனுக்களை கோருவதா, இல்லையா என்பது தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் தீர்மானிக்கப்படும்.
அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டமிட்டிருந்தாலும், திகதிகள் குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என அமைச்சர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.