விக்னேஸ்வரன் வெளியேறிய பின் உதயமானது ஐந்து கட்சிகளின் கூட்டணி(Video)
ஐந்து கட்சிகள் அடங்கிய புதிய கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசிய கட்சி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளன.
யாழ்ப்பாணத்திலுள்ள இன்று (13.01.2023) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் வைத்து குறித்த கட்சிகளின் தலைவர்களால் புதிய கூட்டணி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணி தொடர்பான சந்திப்பு
புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை சந்திப்பொன்று ஆரம்பமாகியிருந்தது.
இந்த நிலையில் ஏற்பட்ட சின்னம் தொடர்பான இழுபறி காரணமாக விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
இந்நிலையில் மீதமிருந்த ஏனைய கட்சிகள் உடன்பாட்டுக்கு வந்து கூட்டாக கூட்டணி அமைக்க முடிவு எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
தமிழரசு கட்சி தனியாக போட்டியிட முடிவெடுத்த பின்னர் ஏனைய தமிழ்த் தேசிய கட்சிகளை இணைத்து குறித்த கூட்டணி உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் கருத்து தெரிவிக்கையில்,
இதற்கமைய தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன்.
ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களுடன் அங்கு வந்திருந்து அதனை மேற்கொள்ள திட்டமிட்டனர்.சில விடயங்களில் இணக்கம் ஏற்பட்ட போதும் பல விடயங்கள் முரண்பாட்டை தோற்றுவித்தது.
ஐந்து கட்சிகளின் கூட்டணியாக நாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்த போது இன்றைய கூட்டத்தில் எமக்குத் தெரியாமல் திடீரென புதிதாக ஜனநாயக போராளிகள் கட்சியை அழைத்து வந்திருந்தனர்.
ஜனநாயகப் போராளிகள் கட்சி பல்வேறு குழுக்களுடன் தொடர்புடையதாக நான் அறிந்தேன். புலிகளோடு இருக்கும் போது அவர்கள் எப்படி இருந்தார்கள் என்றும் தற்போது அவர்கள் எப்படி இருக்கின்றார்கள் என்பதனையும் நாம் அறிய வேண்டும்.
அவர்களை ஆறாவது கட்சியாக கூட்டணிக்குள் இணைக்கும் முடிவை ரெலோ, புளொட் தன்னிச்சையாக எடுத்தார்கள். ஆனால் நாம் அதனை ஏற்றுக் கொண்டோம்.
கூட்டணியின் பெயராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என கட்சியின் பெயரை தெரிவித்து அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக செயல்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. மேலும் கூட்டணியின் தலைமைப் பதவியினை விட்டுக் கொடுத்திருந்தோம்.
எனினும் சின்னம் அல்லது கட்சி செயலாளர் பதவியையாவது எமது கட்சிக்கு தருமாறு கோரினோம். அவர்கள் அதற்கு மறுத்ததால் நாம் கூட்டத்தில் இருந்து வெளியேறினோம். எதிர்வரும் தேர்தலில் மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடும் என தெரிவித்துள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
