கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற அநுர தரப்பு தீவிர முயற்சி! மில்லியன் கணக்கில் பேரம்..
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் ஏனைய எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுடன் மில்லியன் கணக்கில் பேரம் பேசி வருகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஆட்சி அமைக்க முடியாத நிலை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் மக்களுக்கு இதுவரை காலமும் தெரிவித்து வந்த பொய்களுக்கு மக்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு பதிலளித்திருக்கின்றனர். நாடாளுமன்ற தேர்தலில் 68 இலட்சமாக இருந்த வாக்குகளை இந்த தேர்தலில் 45 இலட்சம் வரை அரசாங்கம் குறைத்துக்கொண்டிருக்கிறது.
அதனால் தற்போதாவது பொய் கூறுவதை நிறுத்தி அரசாங்கம் மக்களுக்கு தெரிவித்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கம் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. அதேபோன்று அதிகமான உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.
ஒருசில மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை சமமாக இருக்கின்றன. அதனால் மற்றவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களை தவிர அனைவரையும் திருடர்கள் என தெரிவித்த இவர்கள், தற்போது எப்படி மற்றவர்களின் ஆதரவை பெறமுடியும்?
அதேபோன்று கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை அமைப்பதற்கும் அரசாங்கத்துக்கு முடியாமல் இருக்கிறது. அதனால் தற்போது உறுப்பினர்களை பெற்றுக்கொள்ள மில்லியன் கணக்கில் பேரம் பேசப்பட்டு வருகிறது.
அதிகாரத்தை பெற்றுக்கொள்ள எவ்வாறு திருடர்களுடன் ஒன்றிணைய முடியும்? அம்பாந்தோட்டை பிரதேச சபையில் ஆட்சியை அமைப்பதற்காக தற்போது எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரை பெலவத்த காரியாலயத்துக்கு அழைத்து கலந்துரையாடி இருப்பதாக எமக்கு தெரியவருகிறது.
கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இருக்கிறது. மில்லியன் கணக்கில் கொடுத்தே அவர்களை எடுத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர். இவர்களுக்கு இந்தளவு பணம் எங்கிருந்து கிடைக்கிறது.
அதிகாரத்துக்காக பணம் வழங்க முடியுமா? எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியை மேற்கொள்ள வேண்டும் என்ற செய்தியையே மக்கள் வழங்கி இருக்கிறார்கள். அதன் பிரகாரம் நாங்கள் செயற்பட தயாராக இருக்கிறோம். ஆனால் அரசாங்கம் அனைவரையும் திருடர்கள் என்றே தெரிவித்தார்கள்.
திருடர்களுடன் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க இவர்களுக்கு மக்கள் ஆணை வழங்கவில்லை. என்றாலும் அரசாங்கம் எப்படியாவது கொழும்பு மாநகர சபையில் ஆட்சியை அமைத்து, அவர்களின் வீழ்ச்சியை மறைப்பதற்கே முயற்சிக்கின்றனர் என குறிப்பிட்டார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
