நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது (Photos)
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணம் தற்போது நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு கட்சிகளினாலும் செலுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், ஜனவரி (04) முதல் ஜனவரி 20ஆம் திகதி வரை தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்த முடியுமென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம்
தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் செலுத்தியது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையிலான குழுவினரால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
வலிவடக்கு பிரதேச சபை, வலிமேற்கு பிரதேச சபை, யாழ் மாநகர சபை சாவகச்சேரி நகரசபை, காரைநகர் பிரதேச சபை உள்ளிட்ட ஐந்து சபைகளுக்கு இதன்போது தேசிய மக்கள் சக்தியால் கட்டுபணம் செலுத்தப்பட்டது.
முதலாவது அரசியல் கட்சியாக தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் தனது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.
மேலும் சில சுயேச்சைக்குழுக்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சில பிரதேச சபைகளுக்காக இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
மேலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் களமிறங்குவதற்கு ஐக்கிய சோசலிசக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
"யாழ். மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள சில சபைகளுக்கு எமது கட்சி போட்டியிடும். மக்களும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'ஓட்டோ' சின்னத்திலேயே ஐக்கிய சோசலிசக் கட்சி களமிறங்கவுள்ளது.
நுவரெலியா
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 உள்ளூராட்சி சபைகளுக்கும் போட்டியிடுவதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நேற்று (12) கட்டுப்பணம் செலுத்தியது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி. திஸாநாயக்க, சி.பி ரத்னாயக்க உள்ளிட்ட மொட்டு கட்சி முக்கியஸ்தர்கள், மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்கு சென்று கட்டுப்பணம் செலுத்தினர்.
நுவரெலியா மாநகரசபை, தலவாக்கலை - லிந்துலை நகர சபை, ஹட்டன் - டிக்கோயா நகரசபை மற்றும் 9 பிரதேச சபைகளுக்கே இவ்வாறு கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க, " உள்ளாட்சிமன்ற தேர்தல் நிச்சயம் நடைபெறும் என எதிர்பார்க்கின்றேன். இத்தேர்தலில் அமோக வெற்றிபெறுவோம்." என்றார்.
அதன்பின்னர் கருத்து வெளியிட்ட சிபி ரத்னாயக்க, " ஜனநாயக வழியில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றோம். கூட்டணி அமைப்பதற்கான பேச்சுகள் இடம்பெறுகின்றன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மொட்டு கட்சிகளுக்கிடையில் பேச்சுகள் தொடர்கின்றன." என்றார்.
கட்டு பணம் செலுத்திய பிறகு மொட்டு கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் தேர்தல் அலுவலக வளாகத்தில் பட்டாசுகளை கொளுத்தி, கோஷங்களை எழுப்பி ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது எனவும், முதியோர்கள், சிறு குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார் ஆகியோர் பட்டாசு சத்தத்தால் பாதிக்கப்பட்டனர் எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தலைமையிலான ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, நுவரெலியா மாவட்டத்திலும் தனித்து போட்டியிடவுள்ளது.
இதற்கான கட்டுப்பணம் கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரி குணரத்ன தலைமையிலான குழுவினரால், நுவரெலியா மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் நேற்று செலுத்தப்பட்டது.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன, " நுவரெலியா மாவட்டத்தில் 12 சபைகளுக்கும் எமது கட்சி வாழைப்பழச்சீப்பு சின்னத்தில் போட்டியிடும்.
எமது கட்சியில் இனவாதம், மதவாதம் கிடையாது. இது மக்களுக்கான கட்சி. அதனால்தான் அனைத்து இன மக்களும் எம்மிடம் இணைந்து போட்டியிடுகின்றனர். மக்கள் மாற்றத்தைக்கோருகின்றனர்.
எனவே, ஊழல்களில் ஈடுபடும் அரசியல்வாதிகளை மக்கள் விரட்ட வேண்டும். நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அதேவேளை, தேர்தல் ஒத்திவைக்கப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் நேற்று தெரிவித்தனர்.
நீதிமன்ற தீர்ப்பு ஒன்றின்மூலம் தேர்தலை பிற்போடலாமேதவிர, வேறு வழிகளில் அதனை செய்ய முடியாது. " என்றார்.
மட்டக்களப்பு
வடகிழக்கு மாகாணத்தில் தனித்து களமிறங்கவுள்ள இலங்கை தமிழரசுக்கட்சியானது மட்டக்களப்பில் நேற்றுமுன்தினம் தனது உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளது.
மட்டக்களப்பில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கட்டுப்பணத்தினை செலுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 உள்ளுராட்சிமன்றங்களில் போட்டியிடுவதற்காக நேற்றுமுன்தினம் கட்டுப்பணம் செலுத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசிய
கூட்டமைப்பு கைப்பற்றும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலதிக செய்தி திருமால், தீபன், கஜிந்தன், ராகேஷ், குமார்

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
