நிதி நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற கடன் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம்
அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களால் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் வழங்கப்படுகின்ற கடன் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம் இன்று (11.07.2025) களுதாவளையில் அமைந்துள்ள பிரதேசசபை கேட்போர் கூடத்தில் பிரதேசசபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் இயங்குகின்ற அரச மற்றும் தனியார் நிதி நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
முன்வைக்கப்பட்ட ஆலோசனை
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் இயங்குகின்ற நிதி நிறுவனங்கள் இனிமேல் மக்களுக்கு கடன் வழங்கும்போது தமிழில் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்தல், வராந்தம் அறவீடுகளை மேற்கொள்ளாமல் மாதாந்தம் மேற்கொள்தல், நிருணயிக்கப்பட்ட வட்டி வீதத்தில் கடன்களை வழங்குதல், மக்களை அசௌகரித்திற்குட்படுத்தும் வகையில் அறவீடுகளை மேற்கொள்ளாதிருத்தல் போன்ற ஆலோசனைகள் இதன்போது நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகளிடத்தில் தவிசாளரால் ஆலோசனை முன்வைக்கப்பட்டன.
சட்ட நடவடிக்கை
மேலும் மத்திய வங்கியில் இதுவரையில் தம்மைப் பதிவு செய்யாமல் செயற்படுகின்ற நிதி நிறுவனங்கள் தொடர்பிலும், இதன்போது ஆராயப்பட்டதுடன், இலங்கை சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு செயற்படாத மற்றும் அதிகளவு வட்டி வீதத்தை மக்களிடமிருந்து அறவீடு செய்யப்படும் நிதி நிறுவனங்களுக்கு எதிராகவும் தாம் சட்ட நடவடிக்கை எடுக்க உத்தேசத்தித்துள்ளதாக இதன்போது மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் குறிப்பிட்டுள்ளார்.










