இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்! ஏமன் பிரதமர் பலி
ஏமனின் தலைநகர் சனாவில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தங்கள் அரசாங்கத்தின் பிரதமர் கொல்லப்பட்டதை ஹவுத்திகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தலைநகர் சனாவின் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இன்று அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளனர்.
பிரமரை கொன்ற இஸ்ரேல்
2024 ஒகஸ்ட் முதல் ஹவுதி தலைமையிலான அரசாங்கத்தின் பிரதமராகப் பணியாற்றிய அல்-ரஹாவி, கடந்த ஆண்டு முதலே குறிவைக்கப்பட்டதாக ஹவுத்திகள் குறிப்பிட்டுள்ளனர் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் காரணமாக பிராந்தியத்தில் பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை சனாவையும் தாக்கியுள்ளது.
தமது படைகள் "ஏமனில் உள்ள சனா பகுதியில் ஒரு ஹவுத்தி பயங்கரவாத ஆட்சி இராணுவ இலக்கை" தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவமும் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
காசாவில் தாக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு தமது ஒருமைப்பாட்டை காட்டும் வகையில், செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய கப்பல்கள் மீது, ஹவுத்திகள் தாக்குதல்களை நடத்தி வருவதால், அண்மைய மாதங்களில் இஸ்ரேல் மீண்டும் மீண்டும் ஹவுத்தி நிலைகளை குறிவைத்து வந்தது.
எனினும் ஏமன் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஹவுத்திகளின் இராணுவ நடவடிக்கைகளைத் தடுக்காது என்று ஹவுத்திகள் கூறியுள்ளனர்.



