வடக்கில் பல கடற்றொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
வடக்கில் உள்ள பல குடும்பங்களின் வாழ்வாதாரமான கரையோரப் பகுதியை வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் ஒப்படைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தினால் உள்ளூர் கடற்றொழிலாளர்கள் கொந்தளிப்பில் உள்ளதாக வடமாகாண முன்னாள் மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மெலும் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சங்கானை மாவட்ட செயலகத்திற்குட்பட்ட அராலி முதல் பொன்னாலை வரையான கரையோரம் வனப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான பிரதேசமாக ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலகம், சங்கானை பிரதேச செயலத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
சுவீகரிக்கப்படவுள்ள நிலங்கள்
கடற்கரையை உள்ளடக்கியதாக சுமார் 10 கிலோமீற்றர் நீளமுள்ள நிலப்பரப்பை வன பாதுகாப்புத் துறையிடம் ஒப்படைத்து மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை அந்த பிரதேச மக்கள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
அந்த மக்களின் வாழ்வாதாரமும், வாழ்வியலும் இந்த கரையோரத்தில்தான் தங்கியுள்ளது. ஒதுக்கப்படும், அராலி மேற்கு, தெற்கு, கிழக்கு ஆகிய கரையோரப் பகுதிகள், வட்டு தெற்கு கரையோரப் பகுதி, பொன்னாலை மேற்கு, தெற்கு ஆகிய பகுதிகள் இதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன.
சுமார் 10 கிலோமீற்றர் தூரம் இதில் உள்வாங்கப்படவுள்ளது. வனப் பாதுகாப்பு திணைக்களத்தினால் சுவீகரிக்கப்படவுள்ள பிரதேசத்தில் மக்களின் பொது இடங்களும் உள்ளடங்குகின்றது.
முற்றுமுழுதாக இந்த பிரதேசத்தில் கடல் தொழிலை வாழ்வாதாரமாக கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் சுடுகாடுகள் அங்கு காணப்படுகின்றன.
திணைக்களம் முன்வைத்துள்ள பிரேரணை
விளையாட்டு மைதானங்கள், விவசாயம் செய்யக்கூடிய இடங்கள் எல்லாம் இதில் உள்ளடங்குகின்றன. ஆகவே மக்களின் அடிப்படை வாழ்வாதாரங்களை முடக்கும் வகையில் இந்த முன்மொழிவு அமைந்துள்ளது.
இவ்வாறானதொரு பிரேரணையை வனப் பாதுகாப்பு திணைக்களம் முன்வைத்துள்ள நிலையில், காணியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும், உண்மைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் ஊடகங்களுக்கு அவர் கருத்து வெளியிட்டுள்ளதாகவும், வடமாகாண முன்னாள் உறுப்பினர் வெளிப்படுத்திய விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் வினவியபோது மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
வனப் பாதுகாப்பு திணைக்களம் முன்வைத்துள்ள பிரேரணை தொடர்பில் அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்க ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன், மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்படப்போவதில்லை.” என தெரிவித்துள்ளார்.
சாதாரண மக்களின் ஒப்புதல் இல்லாமல் இதைச் செய்ய முடியாது. இது வர்த்தமானி அறிவித்தலோ, கையகப்படுத்தும் அறிவித்தலோ அல்ல இதுவொரு முன்மொழிவு மாத்திரமே.
இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கும் பணியை ஆரம்பித்துள்ளேன். இதுதான் நடந்தது. வனவளப் பாதுகாப்புத் திணைக்களம் காணியை கேட்பதால் வழங்க முடியாது.
பொது மக்களின் ஒப்புதலுடன் மாத்திரமே இது சாத்தியமாகும். வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகளை வனவளப் பாதுகாப்பு திணைக்களம் பலவந்தமாக சுவீகரித்ததாக கடந்த காலங்களில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |