வவுனியா மாவட்டத்தில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் வவுனியா மாவட்டத்தில் மீண்டும் லிட்ரோ எரிவாயுவிற்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
மாவட்டத்தின் பெரும்பாலான எரிவாயு விற்பனை நிலையங்களில் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், மக்கள் அதனை பெற முடியாது திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
விற்பனை செய்ய மறுப்பு
கையிருப்பில் எரிவாயு சிலிண்டர்கள் காணப்பட்டாலும் விலை திருத்தம் செய்யப்படும் வரை எரிவாயு சிலிண்டர்களை சில விநியோகஸ்தர்கள் விற்பனை செய்ய மறுப்பதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வவுனியா மாவட்ட லிட்ரோ எரிவாயு விநியோகஸ்தரை தொடர்பு கொண்டு வினாவிய போது, எதிர்காலத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்குமா அல்லது குறையுமா என்பதை உறுதியாக கூற முடியாது.
இதன் காரணமாக விற்பனை நிலையத்தினர் குறைந்தளவில்
எரிவாயு சிலிண்டர்களை கொள்வனவு செய்கின்றமையினால் இவ் தட்டுப்பாடு நிலவுவதாக
தெரிவித்தனர்.