புளொட் கட்சியிலிருந்து விலகுவதாக லிங்கநாதன் அறிவிப்பு
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் கட்சியின் முக்கியஸ்தர் ஜி. ரி. லிங்கநாதன் அந்தக் கட்சியின் அனைத்து செயற்பாட்டில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயத்தினை அவர் கட்சி செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கீழ் வரும் காரணங்களை மையமாக வைத்து தமிழீழ மக்கள் விடுதலை கழகம் மற்றும் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அமைப்புக்களிலிருந்தும் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளிலிருந்தும் விலகிக் கொள்கின்றேன்.
கட்சியிலிருந்து விலகல்
கழகத்தின் சொந்த அரசியல் போக்குகளில் இயங்கிக் கொண்டிருந்த முன்னணி தோழர்கள் வாக்கு அரசியலில் ஈடுபாடு காட்டத் தொடங்கியதன் பின்னர் அதுவரை கொண்டிருந்த தார்மீகங்களையும், தத்துவங்களையும் கைவிட்டு ஈழப்பிரச்சனையை தங்கள் சுயநலன்களுக்காக பாவிக்க ஆரம்பித்தனர்.
அதன் தொடர்ச்சியாக தமிழீழ மக்கள் விடுதலை கழகம் சார்ந்த எமது தோழர்கள் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களுடைய கொலைகள் தொடர்பாக கழகமானது ஒரு விசாரணைக் குழுவை நியமித்திருந்த போதும், அவ்விசாரணைக் குழுவானது பின்னர் கலைக்கப்பட்டதாக அறிந்துகொண்டேன். எமது தோழர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மையை அறிந்துகொள்ள முடியாமல் போனதுடன் கழகத்தின் தலமைக்குழு உறுப்பினர்களிடமிருந்து எனது கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்காத காரணத்தினால் நான் மிகவும் கவலையடைந்துள்ளேன்.
கழகத்தின் தலைவர்கள் பேசிய ஜனநாயகம், இடது அரசியல், நுண்ணரசியல் போன்ற அறிவுச் செயற்பாடுகள் எல்லாம் காணாமல் போய் அவர்கள் வெறும் உணர்வுகளால் இயக்கப்பட்டார்கள். இதன் காரணமாக கழகத்தில் கேள்வி கேட்ட என்னைப் போன்ற தோழர்கள் ஒதுக்கப்பட்டார்கள்.
அத்துடன் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் சொத்துக்கள் கடந்த 26 ஆண்டுகளாக கழகத்தின் முன்னணி உறுப்பினர்களால் முறையற்ற விதத்தில் தனிப்பட்ட ரீதியில் கையகப்படுத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது. மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பான கணக்கறிக்கைகளோ ஆவணங்களோ அமைப்பில் இல்லை. சொத்துக்களும் இல்லை. இதற்கான பதிலும் கழகத்தின் முன்னணி தோழர்களால் வழங்கப்படாத காரணத்தினால் தொடர்ந்தும் கழகத்தில் பயணிப்பதற்கு எனது சுயகௌரவம் இடங்கொடுக்கவில்லை.
அரசியல் சுயலாபம்
கடந்த காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகமானது ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் நங்கூரம் சின்னத்தில் போட்டியிட்டு 1994 ஆம் ஆண்டு மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றிருந்தது. அத்துடன் வவுனியா நகரசபை, சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை, பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் நங்கூரம் சின்னத்தில் கைப்பற்றியிருந்தது. யாழ்ப்பாணம் மாநகரசபையில் அதே ஆண்டு எதிர்க்கட்சியாக மாணிக்கதாசன் தலைமையில் கழகம் தனது பங்களிப்பை வழங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து வவுனியா நகரசபை தலைவராக தெரிவு செய்யப்பட்டு எனது தலைமையில் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தது.
இருந்தபோதும் கழகத்தின் முன்னணி தலைவர்கள் தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக மக்களைபற்றிய சிந்தனையற்றவர்களாக வாக்குகளை மாத்திரம் குறிக்கோளாக கொண்டு வீட்டு சின்னம், குத்து விளக்கு சின்னம் மற்றும் சங்கு சின்னம் என காலத்திற்கு ஏற்றவகையில் மாறிக்கொண்டு தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தினையும் அதன் அரசியல் சித்தாந்தத்தினையும் நீர்த்துபோகச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மிதவாத தமிழ் தேசிய அரசியல்வாதிகளின் வெற்று உணர்ச்சி அரசியலானது ஈழத்தமிழருக்கான எதையும் அரசியல்களத்தில் சாதிக்க வல்லமையற்றது என தெரிந்து குறுந்தேசிய அரசியலிலிருந்து விலக ஆரம்பித்துள்ளேன். எதிர்காலத்தில் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் ஸ்தாபகரும், செயலதிபர் க.உமாமகேஸ்வரன் மற்றும் புதியபாதை சுந்தரம் ஆகியோரின் பொது உடைமைவாத சிந்தனைக்கு அமைவாக கழகம் இயங்கினால் நான் தொடர்ந்து பயணிப்பேன்.
ஆனால் தற்சமயம் இருக்கும் தலைமையானது தானாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதுடன் தற்போது இருக்கும் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைமையை நான் நிராகரிக்கிறேன். எனது இந்த நிலைப்பாடானது, சில தோழர்களுக்கு கசப்பானதாக இருக்கலாம். என் மீது அவதூறுகள் அள்ளி வீசப்படலாம்.
நான் ஒரு போராளியாக எனது வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தேன் என்பதே உண்மை, அதனால் ஒரு போதும் நான் கலங்கி நிற்கப்போவதுமில்லை, என் தேசத்தை விட்டு ஓடப்போவதுமில்லை. என்னை நம்பியுள்ள தோழர்களுக்கும், பொதுமக்களுக்கும் உண்மையாக பொதுவுடமை அரசியல் சித்தாந்தத்தில் பயணிப்பேன் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
