சுண்ணக்கல் அகழ்வு தொடர்பில் சிறீதரன் வெளியிட்டுள்ள தகவல்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான
முறையில் திருட்டுத் தனமாக திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (19.04.2024) இடம்பெற்றுள்ள நிலையிலேயே இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுமதி இல்லை
மேலும் தெரிவிக்கையில், “காங்கேசன்துறையில் இயங்கிய சீமெந்து ஆலைக்காக சுண்ணக்கல் அகழ்ந்த பிரதேசங்களான காங்கேசன்துறை, பலாலி தெற்கு ஆகிய பகுதிகளில் உள்ள பாரிய இரு குழிகளும் இன்னமும் மூடப்படாமல் உள்ளது. ஆபத்தான நிலையில் குடிமனைகளின் நடுவே இந்த குழிகள் உள்ளன.
இந்தநிலையில் தற்போது புத்தூர், மாதகல், இளவாலைப் பகுதிகளில் சிலர் இரகசியமான முறைகளில் சுண்ணக்கல்லை அகழ்ந்து மூடி பார ஊர்திகளில் எடுத்துச் சென்றுள்ளனர்.
இவ்வாறு தினமும் 10 முதல் 15 வரையான பார ஊர்திகளில் கற்கள் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு எந்தத் திணைக்களமாவது அனுமதி வழங்கியுள்ளதா” எனவும் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில் அவ்வாறான எந்தவொரு அனுமதியும் வழங்கப்படவில்லை என புவிச்சரிதவியல் திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவர் பதிலளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |