வைத்தியசாலை ஊழியர்களின் கவனயீனத்தால் பறிப்போன உயிர்!(Video)
திருகோணமலை பொது வைத்தியசாலையின் கவனயீனத்தால் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்த சம்பவமொன்று நேற்று (19) பதிவாகியுள்ளது.
திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறக்கக்கண்டி நாளாம் வட்டாரத்தில் வசித்து வந்த இஸ்ஸதீன் முஹம்மட் தஸ்லீம் (29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை
குச்சவெளி தனியார் தொழிற்சாலையில் கடமையாற்றி வரும் குறித்த நபருக்கு கடந்த வெள்ளிக்கிழமை வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த நபர் தனியார் மருந்தகம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய வயிற்று வலி குணமடையாத நிலையில் கடந்த சனிக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் நிலாவளி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சையளிப்பதில் தாமதம்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் வயிற்று வலி குறையாத காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக நேற்று அதிகாலை 3 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் கடமையிலிருந்த வைத்தியரும்,தாதியர்களும் குறித்த நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதற்கு தாமதித்துள்ளதுடன் குறித்த நோயாளி உயிரிழந்து விட்டார் என நேற்று காலை அறிவித்துள்ளனர்.
நோயாளியை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சையளிக்காமல் தாமதித்தமையால் அவருடைய உயிர் பிரிந்தமைக்கு ஐபிஎஸ் சாலை நிர்வாகமே காரணம் என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்து நோயாளி உயிரிழந்தமை தொடர்பில் தமக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருமாறு உயிரிழந்தவரின் மனைவி கோரிக்கை முன்வைத்துள்ளார்.
வைத்தியசாலையின் பணிப்பாளர்
இம்மரணம் தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜகத்
விக்ரமரத்னவிடம் கேட்டபோது தாம் சுகாதார அமைச்சுக்கு கடிதம் மூலம்
தெரியப்படுத்தியுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வை பெற்றுக்
கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.