ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..!
ஈழத் தமிழர்கள் தமது அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் அகிம்சை போராட்டம் ஆயுதப் போராட்டம் இரண்டு என்ற இரண்டு கொள்கைகளையும் தல 30 ஆண்டுகள் கடைபிடித்து போராடி தோற்கடிக்கப்பட்ட விட்டனர்.
தமிழர் தமது கொள்ளளவுக்கு மிஞ்சிய அர்ப்பணிப்புக்களையும், தியாகங்களையும் செய்தும் முள்ளிவாய்க்காலில் அவமானகரமாக தோற்கடிக்கப்பட்டு இருக்கிறோம். இந்த அவமானகரமான தோல்வியிலிருந்து மீள்வதற்கும், சுயநிர்ணய உரிமையை மீட்டெடுப்பதற்குமான புதிய வழிவகைகளை முற்றிலும் அறிவார்ந்த ரீதியில் தேட வேண்டியது அவசியமாகும். இந்த அடிப்படையில் தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதையையும், கதவையும், திறவுகோலையும் இணங்காட்டுவதே இந்தப் பந்தியின் நோக்கமாகும்.
உயிரிகளில் மனிதன் முதன்மை பெறுவதற்கு அவனிடம் இருக்கின்ற நினைவை மீட்கும் அறிவே காரணமாகும். மனிதனிடம் இருக்கின்ற பல லட்சம் ஆண்டுகால சேமிக்கப்பட்ட அறிவின் தொகுப்பே இன்றைய மனிதனின் விஞ்ஞானம் கண்டுபிடிப்புகளுக்கும் வளர்ச்சிக்கும் காரணமாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில் தமிழினம் இலங்கை தீவில் கடந்த நூறு ஆண்டுகளாக தொடர் தோல்விகளை சந்திக்கின்றது. தோல்விகளிலிருந்து மீள்வதற்கு அது தன்னை மீளாய்வு செய்ய வேண்டும். தமிழினம் தன்னிடம் இருக்கின்ற சேகரிக்கப்பட்ட அறிவின் தொகுப்பிலிருந்து நம்மை மீள்பரிசீலனை செய்யும் இடத்து தோல்விக்கான காரணங்களை கண்டறிய முடியும்.
தோல்விக்கான காரணங்களை கண்டறிவதில் இருந்து மட்டுமே வெற்றிக்கான பாதையை திறக்க முடியும். அந்தப் பாதையில் பல்வேறு கதவுகள் இருக்கலாம். அவை சில இடங்களில் திறக்கப்பட்டும், பூட்டப்பட்டும் இருக்கலாம். திறந்த கதவுகளுக்கூடாக திறக்கப்படாத கதவுகளுக்கான திறவுகோலை தேடுவதற்கு தமிழினத்திற்கு அறிவு அவசியமானது.
பூகோளம் தழுவிய அரசியல் அறிவு தமிழ் மக்களின் விடுதலைக்கான வழியை திறக்கும். ஆகவே அந்த விடுதலைக்கான பாதைகளை தேடுவதற்கு தமிழ் மக்கள் முற்றிலும் அறிவியல் மயப்படுத்தப்பட வேண்டும். தமிழர்களை அறிவியல் மையப்படுத்த வேண்டுமானால் ஏற்கனவே தமிழ் மக்களின் மனங்களில்கட்டமைப்புச் செய்யப்பட்டு தூய இலட்சிய வாதங்கள், வீரதீர சாகச கனவுகள், இலக்கிய இதிகாச புராண கதாநாயகர் கற்பனை பாத்திரங்கள், தூய இலட்சிய வீரதீரரங்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டும்.
ஈழத் தமிழர்கள்
விடுதலை கொடுக்க வேண்டும் என்பது முற்றிலும் கற்பனைகளைக் கடந்து, மனவிருப்புகளைக் கடந்து, இப்போது நம்மிடம் என்ன இருக்கிறதோ அவற்றை பயன்படுத்தி முற்றிலும் அறிவார்ந்து நடைமுறைக்கு பொருத்தமான பாதை எதுவோ அதனை தெரிவு செய்ய வேண்டும். உடனடியாக எதைச் செய்ய முடியுமோ அதனை உடனடியாக செய்து நீண்ட காலத்திற்கு செய்யப்பட வேண்டியதை உடனடித் தேவ செய்வதன் ஊடாககூடாக நீண்ட கால தேவைகளை நோக்கி பயணிக்க வேண்டும். முள்ளிவாய்க்கால் தோல்வி என்பது தமிழரிடம் இருந்த அனைத்து தேசிய கட்டுமானங்களையும் சிதைத்து விட்டுள்ளது. இவ்வாறு சிதைக்கப்பட்ட தேசிய கட்டுமானங்களை மீள்கட்டுமானம் செய்வது என்பது இலகுவானதல்ல.
கடந்த கால அனுபவங்களில் இருந்து முற்றிலும் புதிய வழிகளில் அறிவியல் பூர்வமாக செயல்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. விடுதலைக்கான பயணத்தில் அனைத்து கட்டுமானங்களும் புதிய உலக ஒழுங்கின் சூழமைவிற்கு இயைந்ததாக அனைத்தையும் ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். கடந்த 16 ஆண்டுகள் ஏற்கனவே சீரழிந்துபோய் கிடக்கின்ற கட்டமைப்புகளை பழுதுபார்த்தும், திருத்தியும், தோல்வியடைந்து சீழ் பிடித்து போய் இருக்கும் கட்டுமானங்களை மீள்கட்டமைக்க முடியாது.
அதேவேளை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிரிகளாகவும் தனித்தும். எதிரும் புதிருமாக தூய இலட்சிய வாதங்களை பேசிக்கொண்டு நாம் செயற்படுவது என்பது வலது கையால் கத்தியைப் பிடித்து நமது இடது கையை நாமே வெட்டுவதுபோல் நம்மிடம் இருக்கக்கூடிய வரையறுக்கப்பட்ட தமிழ் தேசிய உணர்வாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் அகற்றி விடுவது அல்லது துரத்தி விடுகின்ற தமிழ் தமிழ் தேசிய அழிப்பை நாமே செய்வதாகின்றது.
அதனால் கடந்த 16 ஆண்டுகளில் தமிழ்த் தேசியச் சிதைவை எதிரியை விட நமக்குள் நாமே மோதுவதால் ஏற்பட்ட அழிவே மிகப்பெரியது என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். சரியான கருத்தாக்கமும் அதனை செயற்படுத்துவதற்கான கட்டமைப்பு வாதத்துக்குட்பட்ட தமிழ் தேசிய நிறுவன அமைப்புக்கள் இருக்குமேயானால் இத்தகைய சீரழிவுகள் ஏற்பட்டிருக்காது. எனவே ஈழத்தமிழரின் விடுதலைக்கான அடிப்படை தமி்த்தேசிய கட்டுமானங்களை உடனடியாக தொடங்க வேண்டியுள்ளது.
குடியேற்றவாத கல்வி முறைமை அடித்தளத்திலிருந்தும், பழமையான மத சமூக பண்பாட்டு மரபுகள் ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்ற தூய இலட்சியவாத கற்பனைகளும், புராண இதிகாச கற்பனை கதாநாயகர் தர்ம கோட்பாடுகளில் இருந்து புகுத்தப்பட்ட கருத்து மண்டலமே தமிழர்களிடம் ஆழமாக வேறுான்றியிருககிறது.
நவீன யுகத்துக்கு பொருத்தம் இல்லாத இத்தகைய கருத்து மண்டலம் புரட்சிகரமான விடுதலைப் பாதைக்கு தடவையாக இருக்கிறது. அத்தோடு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை கலாசாரத்தைக் கொண்ட பௌத்த சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக நிகராக போராடுவதற்கும், விடுதலைக்கு பொருத்தமான வழிகளை தெரிவு செய்வதற்கும் தடையாகவும், பொருத்தமற்றதாகவும் இருந்தமையே நமது தோல்விக்கான அடிப்படை காரணம் என்பதை வரலாற்று நடைமுறையில் முள்ளிவாய்க்காலில் நிரூபித்திருக்கிறது.
பொருளாதார அடித்தளம்
எனவே எம்மிடம் இருக்கின்ற தவறான காலத்துக்கு ஒவ்வாத கருத்து மண்டலத்தை உடைத்தெறிந்து புதிய உலக ஒழுங்குக்கு ஏற்ற வகையில் அறிவியல் பூர்வமான நடைமுறைக்கு சாத்தியமான தமிழ் மக்களுடைய இருப்பையும், வாழ்வையும், விடுதலைக்கான பாதையையும், அதன் மீதான நம்பிக்கையும் ஏற்படுத்தக்கூடிய புதிய சிந்தனைப் போக்கையும், கருத்து மண்டலத்தை உருவாக்குவது இன்றைய காலத்தின் தேவையாகும்.
விடுதலைக்கான புதிய பாதைகளை திறப்பதற்கு முற்றிலும் விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகள் அவசியமானது. விஞ்ஞானபூர்வமான அணுகுமுறைகளே புதிய சிந்தனைப் போக்கிற்கு வழிவகுக்கும். பழமைவாத சிந்தனைப் போக்கிலிருந்து விடுபட்டு விஞ்ஞானபூர்வமான சிந்தனை போக்கிக்கு தமிழ் மக்கள் அடியெடுத்து வைக்காமல் தமிழ்த்தேசிய விடுதலை ஒரு அங்குலம் தானும் நகராது.
அத்தகைய ஒரு புதிய சிந்தனை போக்கும் முறை தோன்றினால் மட்டுமே சீரழிவிக்குள்ளாகியிருக்கும் பழைய கருத்து மண்டலத்தை அகற்றி நவீன உலகிற்கு ஏற்ற வகையிலான புரட்சிகரமான கருத்து மண்டலத்தை தமிழ் மக்களில் வேரூன்ற வைக்க முடியும். இத்தகைய ஒரு அறிவியல் புரட்சிகர மாற்றத்தை ஈழத் தமிழர்களிடம் ஏற்படுத்துவதற்கு அறிவார்ந்த வகையிலான தமிழீழ தேசிய அறிவியல் பணியகம் (Tamil Eelam National Science Bureau) என்ற ஒரு நிறுவன கட்டமைப்பு பலமானதாக கட்டமைப்புச் செய்யப்பட வேண்டும்.
இன்றைய பொருளியலில் உற்பத்தி விநியோகம் நுகர்வு என்பன முற்றிலும் அறிவியலையே முதலீடாகக் கொண்டுள்ளது. பொருளீட்டலையே அடிப்படையாக கொண்ட இன்றைய சுயநலமிக்க பூகோளம் தழுவிய பொருளியலில் அறிவியலே அனைத்தையும் வழிநடத்துகிறது. எனவேதான் இன்றைய உலக பொருளாதாரத்தை Knowledge Economy அதாவது அறிவார்ந்த பொருளாதாரம் என அழைக்கப்படுகிறது.
இன்றைய உலக ஒழுங்கு ஒரு பொருளாதார அடித்தளத்தில் இரண்டு அதிகார மையங்கள் தோன்றி விட்ட நிலையில் அறிவியல் என்பது பொருளாதாரத்துக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும், அரசியலுக்கும் மொத்தத்தில் மனித நடத்தை அனைத்தையுமே வழிநடத்திச் செல்வதாய், கட்டுப்படுத்துவதாய் மனிதகுல வாழ்விற்கான பிரதான பாத்திரத்தை வகிக்கிறது. மனிதனிடம் உள்ள சேமிக்கப்பட்ட அறிவே ஆக்கத்திறன் விருத்திக்கு காரணமாகிறது.
எனவே ஆக்கத்தில் அறிவும், அறிவில் ஆக்கமும் என இரண்டும் ஒன்றில் மற்றொன்று தங்கி மனிதனை அச்சாகக் கொண்டு சுத்திச்சுழன்று அறிவும் ஆக்கமும் வளர்கிறது. இவ்வகையில் அறிவே ஆக்கத்தை முன்ணுணரும் சக்தி என்ற வகையில் ஆக்கத்திற்கான வழிகாட்டியாய் அறிவு முன்னோக்கிப் செல்வதோடு அனைத்துவிதமான ஆக்கத்திற்கும் அறிவு முன்வடிவமாகிறது(Blue Print). அறிவியலே அனைத்து வகையான ஆக்கத்திற்குமான அடித்தளமாகிறது. இன்று மனிதகுலத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் தலைமை பாத்திரத்தை அறிவு வகிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் ஆள்வோரும் ஆதிக்கம் செலுத்தும் சக்திகளும் ஒடுக்குமுறைக்கான பிரதான கருவியாக அறிவியலையே ஆயுதமாக கொண்டுள்ளனர். எதிரி என்ன ஆயுதத்தை எடுக்கிறானோ அந்த ஆயுதத்தை நாமும் தரிக்காமல் எதிரியை எதிர்கொள்ள முடியாது.
கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை அரசிடமிருந்து விடுதலை பெறுவதற்கான ஒரு விடுதலைக்கான பயணத்தை ஆரம்பித்திருக்கும் ஈழத் தமிழர்கள் தமக்கு பொருத்தமான அறிவியல் ஆயுதத்தை முதலில் கையில் ஏந்த வேண்டிய வரலாற்று நிப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த வரலாற்று விதிக்கு அமைவாக அறிவியல் ஆயுதத்தை கையில் ஏந்துவதற்கு அறிவியல் தளத்தில் கட்டமைக்கப்பட்ட அமைப்புக்கள் அவசியம். அறிவியல்சார் அமைப்புக்கள் இன்றி நாம் அறிவியல் யுத்தத்தை எதிர்கொள்ள முடியாது. ஈழத்தமிழரின் விடுதலைக்கான திறவுகோலாக தமிழீழ தேசிய அறிவியல் பணியகம் ஒன்று உடனடியாக உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய அறிவியல் பணியகம் உருவாக்கப்படாமல் தமிழ் மக்களுக்கான விடுதலைப் பாதை இன்னும் 100 ஆண்டுகள் கழிந்தாலும் ஓரங்குலம்தானும் நகராது.
இத்தகையம அறிவியல் ஆய்வு நிறுவனத்தினாலேயே ஈழத் தமிழர்களுடைய பிரச்சனைகளை விஞ்ஞான பூர்வமாக அணுகி ஆராய்ந்து மிகச்சரியானதும், பொருத்தமானதுமான முடிவுகளை எடுத்துரைக்க முடியும். இத்தகைய ஆய்வுக் உட்படுத்தப்பட்ட முடிவுகளையே தமிழ்மக்களின் பல்தரப்பினரும் பொதுவாக கட்டுப்பட்டு ஒரு பொதுமுடிவுக்கு வருவது இலகுவாக அமையும். ஆதலால் எம்மத்தியில் இன்று நிலவுகின்ற குழு வாதங்களையும், கருத்து பேதங்களையும் இலகுவாக களையக்கூடியதாக அமையும்.
இந்த தமிழ் ஈழத் தேசிய அறிவியல் பணியகம் என்பது ஒரு குடை அமைப்பாக கட்டமைப்பு செய்யப்பட்டு அதற்கு கீழ் பின்வரும் அறிவியல் கட்டமைப்புக்கள் அல்லது நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்.
1) சிந்தனையாளர் (Think Tank)
2) தகவல் (Information Centre),
3) இராஜதந்திர அணி (The Diplomatic Corps),
4)மொழிபெயர்புப் பிரிவு ((Translation Bureau)
5) , கலை இலக்கிய தேசிய அறிவகம் (National Academy for Art and Literature)
சிந்தனையாளர் குழாம் (Think Tank) எனப்படுவது என்னவெனில் அரசியல், போராட்டம், கொள்கைவகுப்பு, பொருளாதாரம், வரலாறு, பாதுகாப்பு, சமூக பிரச்சனைகள், தேசிய நிர்மாணிப்பு, வெளிவிவகாரம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் போன்ற முக்கிய விடயங்களைப் பற்றி முற்றிலும் விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து அறிக்கைகளை தயாரிக்கும் சுதந்திரமும், சுயாதீனமான குழாமாக இச்சிந்தனையாளர் குழாம் தொழிற்படும்.
அவ்வாறு சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் தொழிற்படும் அறிஞர்களால் மட்டுமே உண்மையும், சரியானதும், பொருத்தமானதுமான முடிவுகளை தரமுடியும். அவ்வாறு சுதந்திரமும் சுயாதீனமாக இயங்குகின்ற அறிவியலாளர்களே தமது முடிவுக்கான நம்பகத்தன்மையையும், இதுசார்ந்த அறிவியல் விடயங்களுக்கு பொறுப்பேற்கவும், பொறுப்புக்கூறவும் திடசங்கற்பம் உள்ளவர்களாக அமைவார். சிந்தனையாளர்குழாம் கூட்டுப்பொறுப்புடன் செயற்படக்கூடியதாக இருப்பதுடன் தேவையான போது தேவையான இடங்களில் துறை சார் நிபுணத்துவமிக்க ஒருவரின் தனித்துவமான அறிக்கை சமர்ப்பிப்பதற்கும் இடம் இருக்கவேண்டும்.
தகவல் ஆதிக்கம்
கூட்டுப்பொறுப்பும் அதேவேளை துறை சார் நிபுணத்துவத்திற்கு ஒருவர் தற்துணிவுடன் தனித்துவமான ஒரு கருத்தை சொல்லவும் இதில் இடம் இருக்கவேண்டும். எனினும் இறுதி அர்த்தத்தில் ஒருவரின் தனித்துவமான அறிக்கையானது செயல்வடிவம் பெறவேண்டிய இடத்து அது கூட்டுப்பொறுப்பான தீர்மானத்திற்கு கீழ்பட்டதாகவே அமையமுடியும். தகவல் மையம் ((Information Centre) எனப்படுவது என்னவெனில் தகவல் சேமிப்பே இன்றைய ஆக்கத்திறன் வளர்ச்சிக்கும் அதுநேரம் அரசியல், பொருளியல் ஆதிக்கத்திற்குமான அச்சாணியாகும்.
ஆதிக்க சக்திகளும் ஆளும், உயர்குழாமும் தமது விருப்பிற்கிணங்க இந்த உலகத்தை மாற்றியமைத்திட விரும்புகிறனர். அதற்கு தகவலையே ஆயுதமாக கொண்டு தமது விருப்பத்தை மக்களின் விருப்பமாக்குவதே தகவல் ஆதிக்கமாகும். ஆதிக்க சக்திகளின் தேவைகளையும், விருப்பங்களையும் பொதுவிருப்பங்களாக வடிவமைத்து காட்டுவதுடன் மக்களை தமது நலன்களுக்கான பண்டங்களாக்கி தமது தேவைக்கேற்ப வாழும் பயன்படுத்தக்தக்க பண்டங்களாக மக்களை அவர்கள் தமது தகவல் ஆதிக்கத்தின் மூலம் வடிவமைத்துவிடுகிறார்கள்.
இது அரசியல், பொருளாதாரம், வாழ்நிலை, போராட்டம் என்ற அனைத்திற்கும் பொருந்தும். ஒடுக்கும் சிங்கள அரசும் ஆளும் குழாமும் ஒடுக்குமுறைக்கு பொருத்தமாக கருத்துலகத்தை உருவாக்கி அதற்கேற்ப தமது சிங்கள மக்களை வடிவமைத்து அதன்வழி தமிழ்மக்களை ஒடுக்குவதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். சிங்கள அரசு தகவல் ஆதிக்கத்தால் உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் தமிழ்மக்களை ஒடுக்குவதற்கான அரசியல், இராணுவ, இராஜதந்திர மற்றும் கருத்துலக இயந்திர அமைப்பை உருவாக்கி அந்த இயந்திரத்தால் ஒடுக்குமுறையை வெற்றிகரமாக்குகிறார்கள்.
இந்தவகையில் தகவல் ஆதிக்கத்தை சரிவர புரிந்து அதனை எதிர்கொள்ள வல்ல ஒரு யுத்த கருவியாக ஈழத்தமிழர்கள் ஒரு தகவல் மையத்தை உருவாக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் போராட்டமானது எதிர்நிலை கருத்தாக்கத் தகவலால் சுற்றி முடிக்கட்டப்பட்டுள்ளது. இத்தகைய தவறான எதிர்நிலைத் தகவல் வலையமைப்பை தகர்த்தெறியாமல் நம் விடுதலை சாத்தியப்படாது. உண்மையில் பெரும் இழப்புபுக்களுக்கும் அழிப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கும் மக்கள் அரும்பெரும் தியாகங்களைச் செய்துள்ளபோதிலும் உலக அரங்கில் எதிர்கணியமாகவே பார்க்கப்படுகின்றனர். எம்பக்கம் நீதியும், நியாயமும், உண்மையும் உண்டு. ஆனால் அது சரியான கருத்து ஆக்கத்தையோ பொருத்தமான தகவல் வலையமைப்பையோ பெறவில்லை. எனவே சர்வதேச அரங்கிற்கு பொருத்தமான ஒரு தகவல் வலைப்பின்னலை அமைக்க வேண்டும். இராஜதந்திர அணி (The Diplomatic Corps) எனப்படுவது என்னவெனில் சர்வதேச அரசுகளிடம் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆதரவு வேண்டி தொழிற்படும் அரசியல் செயற்பாட்டு அணியாகும். நாம் சுமாராக ஐந்து நூற்றாண்டுகளாக அரச பராம்பரியத்தை இழந்த உள்ளோம்.
ஆதலால் தொழில்சார் இராஜதந்திர மரபு எம்மிடம் இல்லை. அதேவேளை பொதுவாக எமது பாரம்பரிய அரசியல் தலைவர்கள்கூட பகுதிநேர அரசியல்வாதிகளாக காணப்பட்டமையால் இராஜதந்திர கலாசாரம் உருப்பெற முடியாது போய்விட்டது. தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாட்டில் அரசியல் சார்ந்த நிர்வாக நிறுவன அமைப்புக்கள், அதற்கான அதிகாரிகள் அமைப்புக்கள் என்பன தோன்றவில்லை. இதனால் இராஜதந்திர அணி உருப்பெறுவது சாத்தியமற்றுப் போனது.
அதேவேளை பன்னாட்டு உறவுகள், மற்றும் சர்வதேச அரசியல் சார்ந்த கற்கை நெறிகளில் பொதுவாக தமிழ்த்தரப்பு ஈடுபட்டது மிகஅரிதே. ஒருபுறம் சிங்கள அரசு சார்ந்து இத்துறைகளுக்கான நலன்கள் காணப்பட்டமையால் தமிழ்த்தரப்பு இதில் ஈடுபடாதிருந்தது. அல்லது இத்தகைய கற்கை நெறிகளில் ஈடுபடுவதினால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நலன்கள் தமிழ்த்தரப்புக்கு கிடைக்கமுடியாது என்பதனால் ஆரம்பத்திலிருந்தே தமிழ்த்தரப்பால் இத்துறை பெருமளவு புறக்கணிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது. ஆனால் இரத்தம்தோய்ந்த, பெரும் தியாகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் பின் இத்துறையின் அவசியம் பெரிதும் உணரப்படுகிறது. இதற்கு துறைசார்ந்த நிபுணர்களை உணர்வுபூர்வமாக உருவாக்க வேண்டியுள்ளது. இதுவே எமக்கு மிகவும் அவசரமான அவசியப்பணியாகும்.
மொழிபெயர்ப்பு பிரிவு (Translation Bureau) எனப்படுவது என்னவெனில் ஈழத்தமிழர்கள் தமக்கான நீதி, நியாயம், உண்மைகளை வெளி உலகத்திற்கு சொல்வதற்கும் தமக்கு பொருத்தமான பிறமொழியில் உள்ள சிந்தனைகளை தமிழில் படிப்பதற்கும் ஒரு மொழிபெயர்ப்புப் பிரிவு அவசியம். இப்பிரிவானது தமிழில் இருந்து ஆங்கிலம், பிரஞ்சு, டொச்சு ஹிந்தி ஆகிய மொழிகளில் முதலும் பின்பு சாத்தியமான அவசியமான மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும். கூடவே பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு சிறந்த சிந்தனைகளை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியீட்டு செய்யப்படவேண்டும்.
கலை இலக்கியத்திற்கான தேசிய அறிவகம் ((National Academy for Art and Literature) என்கின்ற போது இது ஏற்கனவே பல்வேறு வகைப்பட்ட அணிகளாக செயற்பாட்டில் இருந்தாலும் அவையொரு கட்டமைக்கப்பட்ட நிறுவன ஒழுங்கமைப்பில் இயங்குவது இன்றைய காலத்தின் தேவையாகும். இரண்டாம் உலகமகா யுத்த அழிவுகளும், அனுபவங்களும், துயரங்களும் இற்றைவரையான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளின் கலை இலக்கிய படைப்புக்களுக்கான கருவூலமாக காணப்படுகின்றது.
அதேபோல முள்ளிவாய்க்கால் பேரழிவும் இனப்படுகொலையும் ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இலங்கை இந்தியா மற்றும் மனிதகுலம் தழுவிய வரப்போகும் பல நுாற்றாண்டுகளுக்கான கலை இலக்கிய படைப்புக்களுக்கான கருவூலமாக அமையவல்லது. ஈழத்தமிழர்கள் உலக நாகரிகத்திற்கும் மனிதநேயத்திற்கும், விடுதலை மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மிகப்பெரும் பங்களிப்பைச் செய்யவல்ல பொக்கிஷமான அனுபவத்தை இரத்தமும் தசையுமாக கொண்டுள்ளனர். இதனை கலை, இலக்கிய படைப்புக்களாக்கி உலகளாவிய மனித நாகரீகத்திற்கு பங்களிப்புச் செய்யவேண்டிய, செய்யக்கூடிய நிலையிலும் பொறுப்பிலும் ஈழத்தமிழர் உள்ளனர்.
அதற்கான அறிவார்ந்த அமைப்பாக இதனை கட்டியெழுப்ப வேண்டும். விடுதலைக்காக போராடுகின்ற தமிழ் தேசிய இனம் மேற்குறிப்பிட்ட கட்டமைப்பு வாதத்துக்கு உட்பட்ட தமிழ் தேசிய கட்டுமானங்களை உணர்வுபூர்வமாகவும், விசுவாசமாகவும் புத்திபூர்வமாகவும் செயல்படுத்த தவறினால் நாம் தோல்விக்கான பாதையிலேயே தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதாகவே அர்த்தப்பட வேண்டும். இத்தகைய கட்டமைப்புக்களை உருவாக்கினால் மட்டுமே அவற்றின் ஊடாக தமிழ்த் தேசிய விடுதலைக்கான தமிழீழக் கொள்கைத் திட்டம்(Tamil Eelam Manifesto) ஒன்றை தயாரிக்க முடியும் அந்த தமிழீழ கொள்கை திட்ட வரைவு பத்தி விறகு பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 15 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 10 மணி நேரம் முன்

வெளிநாட்டில் கேரள பெண் குழந்தையுடன் மரணம்! அழகாக இருந்ததால் மொட்டை..தாய் பரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri

சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
