போராட்டத்தின் நோக்கம் சிதைந்துள்ளது:காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு
காலிமுகத்திடல் போராட்டம் உட்பட ஏனைய போராட்டங்களில் இருந்து லிபரல் சகோதரத்துவம் என்ற அமைப்பு விலக முடிவு செய்துள்ளது.
தற்போதைய காலிமுகத்திடல் போராட்டத்தை குழுக்கள் மற்றும் சில நபர்கள் தமது அரசியல் கொள்கைகளை பரப்புரை செய்ய பயன்படுத்துதால், போராட்டத்தின் பொது நோக்கம் சிதைந்து போயுள்ளது.
இந்த விடயம் உட்பட சில விடயங்களை ஆராய்ந்த பின்னர் போராட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக லிபரல் சகோதரத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியை கைவிட்டு சென்றதன் மூலம் காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் நோக்கம் நிறைவேறியது.
சமூக செயற்பாட்டாளர்களின் தலையீட்டில் உருவாக்கப்பட்ட “காலிமுகத்திடலுக்கு அப்பால்” என்ற திட்டத்தை, விரிவான அரசியல், பொருளாதார,சமூக கலந்துரையாடல்கள் மூலம் ஏற்படும் இணக்கத்தின் ஊடாகவே நடைமுறைப்படுத்த முடியும். தொடர்ந்தும் போராட்டம் நடத்துவதால், அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது.
அத்துடன் போராட்டகாரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அடக்குமுறையை எதிர்க்கும் அதேவேளை அரசியல் பழிவாங்கலுக்காக தமது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும் சட்ட வரையறைக்குள் செயற்படுமாறு தற்போதைய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் லிபரல் சகோதரத்துவ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
லிபரல் சகோதரத்துவம் என்ற இந்த அமைப்பே காலிமுகத்திடல் போராட்டத்தின் தொடக்கத்திற்கு காரணமாக இருந்தது என்பதுடன் ஆரம்பத்தில் இருந்தே போராட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.