மன்னாரில் படையினர் வசம் உள்ள காணிகள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் காணப்படும் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை மீள கையளிக்க கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்தக் கடிதம் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (26.11.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில்,
மன்னார் மாவட்டத்தில் உள்ள முள்ளிக்குளம், தலைமன்னார் பியர் பள்ளிமுனை, வங்காலை ஆகிய கிராமங்களில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் காணிகள் இன்னும் அவர்களிடம் இருந்து மக்களுக்கு கையளிக்க முடியாத நிலையில் உள்ளன.
தேவாலயத்தைச் சுற்றியுள்ள நிலம்
குறிப்பாக முள்ளிக் குளத்திலுள்ள மக்களின் விளை நிலங்கள் மற்றும் குடியிருப்புக் காணிகள், தலைமன்னார் பியரில் உள்ள சத சகாய அன்னையின் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சொந்தமான காணிகள், வங்காலை நானாட்டான் வீதியின் ஓரத்தில் உள்ள தனிநபர்களின் காணிகள் மற்றும் பள்ளி முனையில் குடியிருப்புக் காணிகள் ஆகியவை விடுவிக்கப்படாமல் உள்ளது.
முள்ளிக்குளத்தில் 2007ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி இந்தக் கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர். 2016ஆம் ஆண்டு 100 ஏக்கர் விடுவிக்கப்பட்டது. மேலும் 900 ஏக்கர் (04 குளங்கள் கொண்ட விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு நிலங்கள் உட்பட) விடுவிக்கப்படாமல் உள்ளது.
வடமேற்கு கடற்படை தலைமையகம் இந்தப் பகுதிக்குள் நிறுவி இருப்பதால் அவர்கள் விடுவிக்க முடியாத நிலையில் உள்ளனர். தலைமன்னார் பியர் சதா சகாய அன்னையின் ஆலயம் மற்றும் தேவாலயத்தைச் சுற்றியுள்ள நிலமும் படையினர் வசம் உள்ளது. இந்த நிலமும், தேவாலயம் மன்னார் மறைமாவட்ட ஆயருக்கும் மக்களுக்கு சொந்தமானது.
தனி நபருக்கு சொந்தமான நிலம்
சுமார் 10 ஏக்கர் நிலம் வடமத்திய கடற்படை கட்டளைத் தலைமையகம் இதற்குள் நிறுவப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஞாயிறு வழிபாடுகள் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிமுனை கடற்படை முகாம் அமைக்கப்பட்ட பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சொந்தமான காணியாகும்.
கடற்படையினர் 2005ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்பகுதியில் முகாமிட்டு வசித்து வருகின்றனர். வங்காலை நானாட்டான் வீதியில் கடற்படை முகாம் அமைந்துள்ளது. இந்த நிலம் ஒரு தனி நபருக்கு சொந்தமானது.
எனவே, மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள மக்களின் காணிகளை விடுவித்து மக்கள் தமது சொந்த நிலங்களில் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் - என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |