வடமாகாண கல்வி பணிப்பாளரின் நடவடிக்கை தொடர்பில் கல்வி அமைச்சுக்கு கடிதம்
பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு வடமாகாண கல்வி பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பில் விசாரணை கோரி இலங்கை ஆசிரியர் சங்கத்தினால், கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் , கல்வி அமைச்சின் செயலாளருக்கு குறித்த கடிதத்தை அனுப்பியுள்ளார்.
தனியார் நிறுவனம்
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தொண்டமானாறு வெளிக்கள நிலையத்துடன் இணைந்து, வடமாகாண கல்வி பணிப்பாளர் பாடசாலை மாணவர்களுக்கான வினாத்தாள்களை பெறுவதுடன் அதனை மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்கும் அனுமதித்து வருகின்றார்.
தனியார் நிறுவனம் ஒன்றுக்கு பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளதுடன் அந்த நிறுவனத்துக்காக ஆசிரியர், அதிபர்களை பயன்படுத்தி பரீட்சைகளை நடத்துதல் மற்றும் வினாத்தாள்களை திருத்துதல் என்பன தவறான செயற்பாடாகும்.
இந் நிறுவனத்தின் வினாத்தாள் திருத்துவது தொடர்பாகவோ பரீட்சைக் கடமைகளில் ஈடுபடுவது தொடர்பாகவோ ஆசிரியர் அதிபர்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்படாமல், வடமாகாண கல்விப் பணிப்பாளர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இச்செயற்பாட்டில் ஈடுபடுவது பாரிய பிரச்சினையாகும்.
குறித்த நிறுவனத்தின் பழைய ஒருவருட கணக்காய்வின்படி மாணவர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட பரீட்சை கட்டணத் தொகையிலிருந்து கிடைத்த வருமானம் பலமில்லியன்களாகும்.
இதன் மூலம் குறித்த நிறுவனம் அடைந்துவரும் இலாபத்தினை அறிந்துகொள்ளலாம்.
பணம் அறவீடு
இந்நிறுவனம் பாடசாலைகளிடமிருந்து பணம் அறவிட்டு பரீட்சை நடத்தும் அதேவேளை, பரீட்சை தொடர்பாக விசுவாசமான செயற்பாடுகளை மேற்கொண்டிருக்கவில்லை.
இவ்வாறான விடயங்கள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளன. வலயக் கல்வி பணிப்பாளர்கள் மூலம் குறித்த நிறுவனத்தின் பரீட்சைகள் தொடர்பாக அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்ட விபரங்களையும் இணைத்துள்ளோம்.
வட மாகாண கல்வி திணைக்களம் மூலம் இச்செயற்பாடுகளை செய்ய வாய்ப்பிருந்தும்,
ஆசிரியர் அதிபர்களுக்கு அநீதி இழைக்கும் இதுபோன்ற செயற்பாடுகள் நடைபெறுவது
தொடர்பாக விசாரணையை கோருகின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



