வவுனியா ஆடைத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து அவசர கடிதம்
வவுனியா ஆடைத் தொழிற்சாலையின் செயல்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம் தெரியப்படுத்தி ஆடைத் தொழிற்சாலையில் ஏற்படும் கோவிட் தொற்று பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட கோவிட் தொற்று தொடர்பில் இன்று கருத்து கருத்து வெளியிட்டபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு முழுவதும் கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ளது. வவுனியா மாவட்டத்திலும் அதிகளவான கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக மாவட்ட மட்ட கூட்டத்தில் பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
எனினும், சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பாக பொலிஸார் அல்லது ஏனைய அரச உத்தியோகத்தர்கள் ஒத்துழைப்பு வழங்குவது குறைவடைந்துள்ளது. எனவே அனைவரும் இணைந்தால் தான் கோவிட் தொற்றிலிருந்து மீள முடியும்.
ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நிறைய சட்ட திட்டங்கள் உள்ளது. குறைந்தபட்சம் அங்கு வேலை செய்பவர்கள் அதிக இடைவெளிகளை பேண வேண்டும். ஆனாலும் நீங்கள் சொல்வதை என்ன கேட்பது என்ற நிலையில் தான் அவர்களது செயற்பாடும் உள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதம் மூலம் தெரியப்படுத்தி இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க உள்ளேன்.
அத்துடன் சுகாதார பணிமனைக்கு நிறைய தேவைகள் உள்ளன. அதனைப் பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுப்பேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.