அரசாங்கத்தின் மற்றுமொரு நிதி விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பெரும் சர்ச்சை
அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பும் நிதியம்’ (Rebuilding Sri Lanka Fund) சட்ட ரீதியாக ஸ்தாபிக்கப்படவில்லை எனவும், அதன் இருப்பு குறித்து பாரிய சந்தேகம் நிலவுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
தனது 'X' தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், நிதித்துறை இராஜாங்க அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு கடும் சவால விடுத்துள்ளார்.
இந்த நிதியத்திலுள்ள பணம் "பாதுகாப்பாக" இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறிய போதிலும், சட்ட ரீதியாக அப்படி ஒரு நிதியமே இல்லை என ஹர்ஷ டி சில்வா வாதிடுகிறார்.

நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சட்டப்பூர்வ நிதியங்களை மட்டுமே பராமரிக்க முடியும். ஆனால், இந்த நிதியம் அவ்வாறு முறைப்படி நிறுவப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) வேலைத்திட்டத்தின் கீழ், பல நிதியங்கள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தாம் பலமுறை கேள்வி எழுப்பியும், அதிகாரிகள் "நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றே பதிலளிப்பதாகவும், இதன் மூலம் அந்த நிதியம் இதுவரை முறையாக உருவாக்கப்படவில்லை என்பது உறுதியாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னதாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிதித்துறை இராஜாங்க அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஏப்ரல் 24, 2026 நிலவரப்படி இந்த நிதியத்தில் மொத்தம் 9,583 மில்லியன் ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளதாகக் தெரிவித்திருந்தார்.
மேலும், 2025ஆம் ஆண்டு 'டிட்வா' (Ditwah) சூறாவளி பாதிப்புக்குப் பின்னரான புனரமைப்புப்பணிகளுக்காக மேலதிக மதிப்பீட்டின் கீழ் 500 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், அதில் பெரும் பகுதி இன்னும் பயன்படுத்தப்படாமல் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அரசாங்கம் நிதியத்தில் பணம் இருப்பதாகக் கூறினாலும், நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் அத்தகைய ஒரு நிதியம் முறையாகப் பதிவு செய்யப்படாமல் இருப்பது, அந்தப் பணத்தின் கையாளுதல் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளதாக ஹர்ஷ டி சில்வா எச்சரித்துள்ளார்.
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan