பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூரில் வாழும் அர்ஜுன மகேந்திரன் - அமைச்சர் வெளியிட்ட தகவல்
சிங்கப்பூரில் வசிக்கும் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை நாட்டிற்கு அழைத்து வருவதில் சட்டம் சார்ந்த தடைகள் நிலவுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
எனினும், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியமான சட்ட வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவாக ஆராய்ந்து வருவதாக குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் பிரஜையாக அந்நாட்டிலேயே வசித்து வரும் அர்ஜுன மகேந்திரன், தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.
அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கை
அர்ஜூன் மகேந்திரனை இலங்கைக்கு நாடு கடத்துவதில் சட்ட பூர்வமான தடைகள் உள்ளன. ஆனால், சாத்தியமான அனைத்து சட்டபூர்வ வழிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

அதேவேளையில், மத்திய வங்கி பிணைமுறி வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசு விடுத்த நாடு கடத்தல் கோரிக்கையானது, சிங்கப்பூரின் 'நாடுகடத்தல் சட்டத்தின்' கீழ் தேவையான சட்டத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அர்ஜுன மகேந்திரனை ஒப்படைக்கும் கோரிக்கையை சிங்கப்பூர் அரசு முன்னதாக நிராகரித்திருந்தது.
மத்திய வங்கி பிணைமுறி பரிவர்த்தனைகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்ட நடவடிக்கைகளுக்காக அர்ஜுன மகேந்திரன் இலங்கையில் தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்.
அரசுக்கு 11 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 2019 ஜூன் மாதம் 'மூவரடங்கிய நிரந்தர மேல் நீதிமன்றத்தில்' இவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
39பேரின் இருப்பிடங்கள்
இதற்கிடையில், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை இலங்கைக்குக் கொண்டுவந்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக சர்வதேச பொலிஸாரிடமிருந்து மொத்தம் 236 சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.
இவற்றில் 110 சிவப்பு எச்சரிக்கைகள் தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற பின்னரே பெறப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களில் 66 பேர் ஏற்கனவே இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், மேலும் 97 பேரிடம் விசாரணைகள் தொடர்வதாகவும் அமைச்சர் கூறினார்.
இதில் 39 பேரின் இருப்பிடங்களை அதிகாரிகள் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர்.
அத்துடன், தேடப்பட்டு வரும் மேலும் ஒரு நபர் அடுத்த வாரத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்படுவார் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 11