கிளப் வசந்தவின் கொலை தொடர்பாக புதிய சிக்கலில் பொலிஸார்
நாட்டை உலுக்கிய அத்துருகிரிய கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான பச்சை குத்தும் கடை உரிமையாளரின் வாக்குமூலத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட பொலிஸார் அனுமதித்தமை தொடர்பில் சட்ட வல்லுநர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இது இந்த கொலை வழக்கின் இறுதி முடிவை மாற்றியமைக்கக் கூடும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் காணொளியை கசியவிட்ட பொலிஸ் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்ட வல்லுநர்கள் கேள்வி
ஒரு குற்ற விசாரணை இடம்பெறும் போது உரிய நடைமுறைகள் பின்பற்றபட வேண்டும். அத்துடன், குற்றவாளியை சட்டத்திற்கு முன் கொண்டுவரக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
ஆனாலும், சந்தேகநபரிடம் இருந்து வாக்குமூலத்தை பெறுவதற்கு உரிய அடிப்படை விடயங்களை பொலிஸார் மறந்து ஊடகங்களின் முன் விசாரணையை நடத்தியுள்ளனர்.
மறுபுறம், இந்தக் காணொளியை பதிவு செய்தல் மற்றும் வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்த்திருக்க வேண்டும். இதற்கு பொறுப்புக்கூற வேண்டிய அனைவரின் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை, இந்தக் காணொளி வெளியிடப்பட்டமை குறித்த இன்று நாடாளுமன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவாதம்
இரண்டு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
சந்தேகநபரிடம் பொலிஸ் விசாரணை நடத்தும் முன்னரே, ஊடக நிகழ்ச்சி நடத்தபட்டது தெளிவாகத் தெரிகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்போது, சந்தேக நபரிடம் கேள்விகளை கேட்ட பொலிஸ் அதிகாரி, மறந்து விட்ட விடயங்களை, சந்தேக நபருக்கு நினைவூட்டுவதை தெளிவாகப் பார்க்க முடிந்தது என்றும் திசாநாயக்க கூறியுள்ளார்.
அத்துடன், கொலைக்கு காரணமானவர்களை விடுவிப்பதே காணொளியை ஒளிபரப்பியதன் பின்னணியில் இருக்கும் நோக்கமாக இருக்கலாம் என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தக் காணொளியை பகிரங்கமாக ஒளிபரப்பினால், விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் பாதிக்கப்படும் எனவும் அவைத் தலைவர் சுசில் பிரேமஜயந்தவும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - சிவா மயூரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |