மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!
மன்னார் நகரப் பகுதியில் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நகரப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, குறித்த உணவகத்தில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
குறிப்பாக, உணவுகள் சுகாதாரமற்ற முறையில் கையாளப்பட்டமை, உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்படாமை, அதிகளவான ஈக்கள் காணப்பட்டமை, உணவைக் கையாளும் பணியாளர்கள் கையுறைகள் மற்றும் தலை உறைகள் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை அணியாமை, வடிகால்கள் முறையாகத் துப்புரவு செய்யப்படாமை உள்ளிட்ட பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
சோதனை நடவடிக்கை
மேலும், காலாவதியான பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமையும் ஆய்வின் போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த உணவகத்திற்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுமக்களின் சுகாதாரத்தையும் உணவுப் பாதுகாப்பையும் உறுதிபடுத்தும் நோக்கில், இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





